சூப்பர் ஸ்டாருக்கு கதை எழுதவேண்டுமானால் என்ன கதை எழுதுவீர்கள்?

எழுத்தாளர்கள் மட்டும் பாட்டேர்னில் (Pattern) மாட்டிக்கொள்வதில்லை. நடிகர்களும் கூட அவர்களுக்கென்று ஒரு வகையை ஆழ் மனதில் வகுத்துக்கொள்வார்கள். அந்த வகையை சேர்ந்த கதையை மட்டுமே அவர்கள் மனம் விரும்பும். எவ்வளவு முறை அந்த வகையான கதைகளில் நடித்திருந்தாலும் மீண்டும் அதே வகையான கதையை சொல்லும்பொழுது புதிதாக கேட்பது போன்ற உணர்வு இருக்கும். சில பேர் வீட்டில் இட்லி சாப்பிட்டாலும் ஹோட்டலுக்கு சென்றும் இட்லியையே விரும்பி சாப்பிடுவார்கள். அது போல நடிகர்களும் ஒரு பாட்டேனுக்குள் மாட்டிக்கொண்டால் ஒரே வகையான கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.
எழுத்தாளர்களும் கதாநாயகனிடம் கதையை சொல்லி வாய்ப்பு பெறவேண்டும் என்று எந்த விஷயங்கள் எல்லாம் அவரின் ரசிகர்கள் விரும்பினார்களோ அதையே வேறு விதமான காட்சியாக அமைப்பார்கள். சூப்பர் ஸ்டார் முப்பது வருடங்களுக்கு முன்பே ஒரு பாட்டேனுக்குள் வந்துவிட்டார். இவரின் பல திரைப்படங்கள் மேன் இன் த ஹோல் (Man in the hole) வகையான கதை அமைப்பில் உருவாக்கப்படுகிறது. அதாவது கதை தொடங்கும்பொழுது கதாநாயகன் நல்ல நிலைமையில் இருப்பார். பிறகு ஏழையாகவோ, மோசமான சூழ்நிலையோ அனுபவிப்பர். பின்னர் அவருடைய முயற்சியினால் மீண்டும் நல்ல நிலைக்கு வருவார்.

அண்ணாமலையில் நல்ல நிலையில் இருக்கும் பால்காரர், மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் அவருடைய சொந்த முயற்சியால் வாழ்க்கையில் ஜெயிக்கிறார். அருணாச்சலம், முத்து, படையப்பா, சிவாஜி, எந்திரன், பேட்ட, தர்பார் போன்ற திரைப்படங்கள் இந்த கதை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.  தன் வீடு, சொந்தமான சொத்து என்பதே தெரியாமல் அதே வீட்டிலேயே வேலை பார்ப்பவராக மிஸ்டர் பாரத், வேலைக்காரன், ராஜாதி ராஜா, அதிசய பிறவி, பணக்காரன், உழைப்பாளி, முத்து ஆகிய திரைப்படத்தில் நடித்திருப்பார். 

அவருக்கென்று ஒரு மறைக்கப்பட்ட கடந்த காலம் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு வெளியில் தெரியும். சிவா, வள்ளி, பாண்டியன், பாட்ஷா, குசேலன், லிங்கா, கபாலி, பேட்ட போன்றவை இருக்கும். நட்புக்கு தன் உயிரை கூட கொடுப்பது, வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாய் இருப்பது, எதிரிகளை தட்டி கேட்பது, எவ்வளவு வீரனை இருந்தாலும் பெண்ணிடம் பேச பயப்படுவது, அடக்க நினைப்பவர்களை எதிர்கொள்வது, சவாலில் ஜெயிப்பது, யாருடைய பொருளிற்கும் ஆசை படாதது, வாக்கு கொடுத்ததற்காக சொத்தைக்கூட இழப்பது, இவரை பற்றி எல்லோரும் புகழ்வது, தன்னுடன் இருப்பவர்களே இவரை ஏமாற்றுவது என்று மேலே சொன்ன விஷயங்களோடு கலந்து எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.