சுயம்புலிங்கம் தவறுதலாக ஒரு இளம் பெண்ணை அவர் வீட்டில் கொலை செய்திருந்தால்? அவரின் குடும்பம் அவர் இறங்கிய அளவிற்கு இறங்கி கை கொடுத்திருக்குமா?
ஒரு அனுமான கேள்வி (Hypothetical Question) தான். இதை ஒரு ஆணாதிக்க பதிவாக எண்ணவேண்டாம்.
பாபநாசம் திரைப்படத்தில் ஒரு கொலையை மறைக்க சுயம்புலிங்கம் பாடுபடுவது ஏன்?
சுயம்புலிங்கம் ஒரு உள்முக நபர் (Introvert). அவருக்கென்று ஒரு சிறிய வட்டம். அதில் இருக்கும் மனிதர்களிடத்தில் தான் பழகுவார். அவரின் குடும்பத்தை நெருக்கமாக நேசிப்பவர். கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பதுபோல் பாதுகாப்பவர். இவரால் தண்டனையை ஏற்றுக்கொண்டு குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது. குடும்ப உறுப்பினர் ஒருவரை காட்டிக்கொடுக்கவும் முடியாது. இந்த கொலையை மறைக்க அடுத்து என்ன செய்யலாம் என்று அவர் எடுத்த முடிவே இப்பொழுது இருக்கும் கதை. இந்த கதையில் தன் பெண்ணை அவர் எங்குமே அவர் சந்தேகிக்கவில்லை. அந்த பெண் சொன்ன அணைத்து விஷயங்களையும் அவர் நம்பி அடுத்த கட்ட முடிவு எடுக்கிறார்.
ஒரு கற்பனை கதையில் பயணிக்கலாம் - ஒரு வேளை கதை இப்படி பயணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சுயம்புலிங்கத்தை தவிர வீட்டில் யாரும் இல்லாதபொழுது ஒரு பெண் அவரை தேடி வருகிறாள். அவர் மேல் காதல் கொண்டதாக சொல்கிறாள். அவளை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறாள், மிரட்டுகிறாள். சுயம்புலிங்கத்தை வெறுக்கும் கான்ஸ்டபிள் பெருமாள் தான் அவளை ஏற்பாடு செய்திருக்கிறார். எப்படியாவது சுயம்புலிங்கத்தை ஏதோ ஒரு கேசில் மாட்டிவிடவேண்டும் என்று நினைக்கிறார். இந்த நேரத்தில் தவறுதலாக சுயம்புலிங்கம் அந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அங்கு வரும்பொழுது சுயம்புலிங்கமும் அந்த பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை அவர்கள் கிழே சிதறிக்கிடப்பதை பார்க்கிறார்கள்.
அந்த குடும்பம் அதை பார்த்துவிட்டு என்ன செய்யும்? சுயம்புலிங்கம் அடுத்து என்ன செய்வார்? எதற்காக அந்த பெண் அங்கு வந்தாள் என்று எப்படி புரியவைப்பார்? அவர் சொல்லும் கதையை அந்த குடும்பம் நம்புமா? அவர் அந்த கொலையை மறைக்க குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்களா? யார் கேட்டாலும் ஒரே கதையை எல்லோரும் சொல்வார்களா?
இந்த கேள்விகள் எல்லாமே அனுமானம் தான். மனைவி, மக்கள் சுயம்புலிங்கத்தை சந்தேகப்பட்டிருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். உளவியல் ரீதியாக பார்க்கப்போனால் தன் மகள் தவறே செய்திருந்தாலும் அப்பா என்பவர் மகளை காப்பாற்றத்தான் நினைப்பார். ஆனால் குடும்ப தலைவன் ஒரு தவறு செய்யும்பொழுது அதே அளவிற்கு குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்ற வருவார்களா என்பது கேள்விக்குறி தான். சமுதாயத்தில் பல சுயம்புலிங்கங்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பெரிய பெரிய தவற்றை மறைத்து அவர்களை மக்களிடம் இருந்து காக்கின்றனர். ஆனால் சிறிய தவறு செய்யும் சுயம்புலிங்கங்களை அந்த உறுப்பினர்கள் மன்னிப்பதேயில்லை.
இந்த அனுமான கதையில் சீக்கிரமே கதாநாயகன் மாட்டிக்கொள்வர் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்கும். கணவன் மனைவிக்கு துரோகம் செய்த கதையாகவும், கள்ள உறவு கதையாகவும் மாறியிருக்கும். அது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்காது. கதையை நீண்ட நேரம் வளர்க்கவும், சஸ்பென்ஸ் கூட்டவுமே இப்பொழுது இருக்கும் வகையை இயக்குனர் தேர்தடுத்தார் என்று நினைக்கிறன்.