பாட்டேர்ன் (Pattern) என்னும் முறை எப்படி எழுத்தாளர்களை தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு புதிய வகை சிந்தனையை வரவிடாமல் தடுக்கிறது என்பதை இதற்கு முன் பல கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். பாட்டேர்னை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் பெரிய அளவில் பேசப்படுவார்கள். அதற்குள் எழுத்தாளர்கள் வீழ்ந்துவிட்டால் புதர்க்குழி மணல் போல் மூழ்க வேண்டியிருக்கும்.
என்னுடைய இன்றைய ஆராய்ச்சியில் இயக்குனர் ரா. பார்த்திபனின் கதை உலகத்தை பார்க்கும்பொழுது எப்படி பாட்டேர்ன் அவரின் கதைகளில் வியாபித்திருக்கிறது என்பது தெரிந்தது. அவருடைய இயக்கத்திலும் சரி, அவர் மற்ற இயக்குனர்களின் கதைகளை தேர்ந்தெடுக்கும்பொழுதும் சரி அவரின் ஆழ்மனதிற்கு (Sub Conscious Mind) பிடித்த பாட்டேர்னை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பது தெரிந்தது.- அனாதை
- உள்முக நபர்
- அவரின் தகுதியை விட அழகான பெண்
- துரோகம்
- சமூக கோபம்
- ஏமாற்றுதல்
- கள்ளத்தொடர்பு / முறை இல்லா உறவு
- அரசியல் வசனங்கள்
- அன்பிற்க்காக ஏங்குதல்
- இரட்டை அர்த்த வசனம் / கெட்ட வார்த்தை
- தன் மனதில் கட்டியிருக்கும் மாயை உலகம்
- பொருளாதார பற்றாக்குறை
- பொறுப்பற்ற பெற்றோர்கள்
நிறைய திரைப்படங்களில் அனாதையாக பொருளாதார பிரச்சனை நிறைத்த குழந்தை பருவத்தில் இருப்பதால் உள்முக நபராக இருப்பார். அந்த பாதிப்பு அவருக்கான ஒரு மாய உலகத்தை உருவாகியிருக்கும். நிறைய நபர்கள் இவரை பல விஷயங்களுக்காக ஏமாற்றியிருப்பார்கள். அந்த கோவத்தில் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பவராக இருப்பார். தன்னை விட அழகில் / தகுதியை மீறிய பெண்ணோடு தான் காதல் பிறக்கும்.
ஹவுஸ்புல், ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற திரைப்படங்களில் இவர் காதலி / மனைவி மீது அன்பு வைத்திருப்பார் அனால் அவர்கள் இவருடைய காதலை நிராகரித்து வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பார். இவன் மற்றும் இரவின் நிழல் தெலுகு பேசும் கதாநாயகிகள். புதிய பாதை, சரி கம பத நீ போன்ற திரைப்படங்களில் இவரால் கதாநாயகிக்கு உடல் ரீதியான பிரச்சனை. துரதிஷ்டம், இயலாமை, ஆசைப்படுவது கிடைப்பதில்லை போன்றவை அதிகமாக நிறைந்திருக்கும்.
இவர் எழுதும் கதைகளை ஒரு காமெடி கதையாகவோ, மாயாஜால கதையாகவோ, எழுதுவதற்கு அவரின் பாட்டேர்ன் ஒரு தடையாகிறது. அதனால் தான் புதிய பாதை, சரி கம பத நீ, பச்சை குதிரை, கோடிட்ட இடத்தை நிரப்புக, இரவின் நிழல் போன்றவைகளில் பெண் ஆசையை கொண்டு கதை இருக்கும். இந்த பாட்டேர்ன் தான் இவரின் இயக்கத்தில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்க தடையாகிறது. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு கதையை சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களின் பாட்டேர்ன் இவரின் பாட்டேர்னான சமூக அவலம், பெண் ஆசை, இரட்டை அர்த்த வசனம், ஏமாற்றுதல், கள்ள தொடர்பு போன்ற பட்டெரனோடு ஒத்துப்போகாததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. இவரின் பாட்டேர்ன் என்னவென்று தெரிந்து அவர் அதை மாற்ற முனைந்தால் புதிய வகை கதை சொல்லி இவர்க்கு பிறக்கும். இல்லையேல் அடுத்த திரைப்படத்திலும் இவர் என்ன விஷயங்களை பேசுவார் என்று மக்கள் முன்கூட்டியே தீர்மானிப்பார்கள்.