கிரிஞ்சு (Cringe) - பார்வையாளர்களின் உளவியல்

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டில் 1950 முதல் 1970 வரை வந்த திரைப்படங்கள், அதன் வசனம், பாடல்கள் மட்டுமே அதிகமாக ஒலிக்கும். குடும்பத்துடன் திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே சிவாஜி, எம்ஜியார் போன்றவர்களுடையது. விவரம் தெரிந்த பின்பு தனியாக நானே புதிய திரைப்படங்களை பார்க்க தொடங்கிவிட்டேன். வேகமாக நகரும் திரைக்கதை, புதியவகையான உடை, வசனம், நடிகர்களின் பாவனைகள் எல்லாமே என்னை கவர்ந்தது. ஒளியும் ஒலியும் தான் புதிய பாடல்களை கேட்க ஒரே வழி. ஐந்து பழைய பாடல்கள் போட்டால் ஒரு புதிய பாடல்களை போடுவார்கள். அதுவும் கடைசியாக.

புதிய பாடல்களை கேட்பதற்காகவே பொறுமையுடன் இருந்து கேட்பதுண்டு. சில நாட்கள் புதிய பாடல்களே வராமல் கூட போய்விடும். புதிய பாடல்களை கேட்கும்பொழுது என்னுடைய பெற்றோர்கள் முகம் சுளிப்பார்கள். பழைய பாடல்களை கேட்கும்பொழுது நான் பொறுமை இழந்ததுண்டு. நீளமாக கண்ணாம்பா வசனம் பேசுவதை என் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் ரசித்து கேட்பார்கள். நடு நடுவே உச்சு கொட்டுவார்கள். "எப்படி நடித்திருக்கிறார்கள் பார்" என்று பாராட்டுவார்கள். இதெல்லாம் பார்த்த பொழுது அன்று எனக்கு ஒரு வார்த்தை கிடைக்கவில்லை. அந்த வார்த்தை அன்று புழக்கத்திலேயே இல்லை. ஆனால் இன்று எல்லா இளைஞர்களும் அடிக்கடி சொல்வது "அந்த படம் ஒரு கிரிஞ்சு ப்ரோ" என்று தான்.

இப்பொழுது எனக்கு இருக்கும் பக்குவத்தை வைத்து நான் ஆராயும்பொழுது எனக்கு தெரிந்ததெல்லாம் இந்த பார்வையாளர்களின் உளவியல் தான். ஒவ்வொரு தலைமுறைக்கும் அதனுடைய முந்தய தலைமுறையின் படைப்புகள் கிரிஞ்சுகளாகவே பார்க்கிறது. "சம்சாரம் அது மின்சாரம்" இன்று வந்திருந்தால் அதை நாம் கிரிஞ்சாகவே கருதுவோம். இன்றைய இளைஞர்களால் பத்து வருடத்திற்கு முன்பு வந்த திரைப்படங்களை ரசித்து பார்க்கமுடியாது.

இன்றைய இளைஞர்கள் தல, தளபதியின் வெறித்தனமான ரசிகர்களாகவே இருந்தாலும் அவர்களின் தொடக்க கால திரைப்படங்களை இன்று வெளியாகும் திரைப்படங்களை போல் ரசிக்க மாட்டார்கள். நல்ல திரைப்படங்களாக இருந்தாலும் வான்மதியும், அமராவதியும் இன்றைய இளைஞர்களுக்கு கிரிஞ்சு தான். இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் ரசிகர்களின் ரசனையை உயர்த்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ரசனை ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாறுகிறது என்று தெரியாமலேயே!

ரஜினி, கமல் என்று புதியவர்கள் அதிகமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் என் தலைமுறை பெற்றோர்கள் திரையரங்கம் செல்வதை நிறுத்திவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த குடும்ப கதை, பாசம் எல்லாம் மெத்தனமாக புதியவர்கள் கையாள்கிறார்கள் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. எம். எஸ். வி யை தெய்வமாக வணங்கினார்கள். அவர் போடுவது போல் இசையை புதியவர்களால் தரமுடியாது என்றார்கள். இளையராஜாவையே கேட்டவர்களுக்கு ரகுமானை ஒப்புக்கொள்ள பல வருடங்கள் ஆனது. அனிருத்தின் இன்றைய இசையை சென்ற தலைமுறை இசையமைப்பாளரோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

இருபது வருடங்களுக்கு முன் திரைப்படம் இயக்கும் ஆசையோடு ஒருவர் சென்னைக்கு வந்திருந்தால் எப்படிப்பட்ட திரைப்படங்களை மக்கள் உண்மையில் இன்று பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட கதையை நாம் எழுதவேண்டும் என்கிற மனக்குழப்பத்தில் இருப்பார்கள். எப்பொழுதோ கொண்டாடிய "பைசெயிகில் தீவ்ஸ், சில்ரன் ஆப் தி ஹெவன்" (Bicycle Thieves, Children of the heaven) போலவே இன்று நீங்கள் திரைப்படங்களை எடுக்க நினைத்தால் அது இன்றைய இளைஞர்களால் கிரிஞ்சாகவே பார்க்கப்படும்.