அடையாளம் (Identity) VS சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள்

இதற்கு முன் நான் எழுதிய என்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் பாட்டேர்ன் (Pattern) என்னும் “முறை” எப்படி ஆழ்நிலையில் படைப்பாளிகளுக்கு வேலை செய்கிறது என்று கூறியிருந்தேன். கதை எழுதுபவர்களுக்கு, சொல்பவர்களுக்கு மட்டும் அல்ல அதை கேட்பவர்களுக்கும் பாட்டேர்ன் நமக்கே தெரியாமல் நம் வேளைகளில் தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களை ஆராய்ச்சி செய்யும்போது எனக்கு கிடைத்த பாட்டேர்ன் மிகவும் ஆச்சரியபட வைத்தது. கதை இவரின் பட்டெரனுக்காக எழுதப்பட்டதா அல்லது இவர் அந்த பாடேர்ன் கதைகளை தேர்ந்தெடுத்தாரா என்கிற சந்தேகம் வருவது இயற்கையே.

சரி, இப்பொழுது இவரின் பாட்டேர்ன் என்னும் முறையை பார்க்கலாம். இவரின் திரைப்படங்கள் அடையாளம் (Identity) என்னும் முறையை அதிகமாக கொண்டுள்ளது. இந்த முறையானது அடையாளம் வேண்டி போராடுவது, அடையாளத்தை மறைப்பது, இவரின் அடையாளத்தை மற்றவர் அழிக்க நினைப்பது என்று பல்வேறு கோணங்களில் உள்ளது.

இவரின் முதல் திரைப்படமான அபூர்வ ராகங்களில் இந்த அடையாளம் நன்றாக கையாளப்பட்டுள்ளது. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிரும்போது திடீரென ஒருவர் பழைய கோட்டுடன் கதவை திறந்தபடி வீட்டிற்குள் நுழைகிறார். அவர் தேடிவந்தது கணவன் என்னும் அடையாளத்தை. நீண்ட வருடங்களாக குடும்பத்தை விட்டு விலகியிருக்கும் இவர் தன் வீட்டிற்குள் நுழையும்போது, உலகநாயகனின் கதாப்பாத்திரம் இவரை பார்த்து நீ யார் என்று இவரின் அடையாளத்தை கேட்கும்.

பிறகு பைரவியில் தொலைந்துபோன சகோதரியின் அடையாளம், தில்லு முள்ளுவில் நல்லவன் முரடன் என்னும் அடையாளம் உருவாக்குவது, பில்லாவில் தீவிரவதைப்போல வேடமிட்டு மறைக்கும் அடையாளம் என்று ஆரம்பகால திரைப்படங்களில் அங்கும் இங்குமாக உபயோகப்படுத்தப்பட்ட அடையாளம் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

தளபதியில் தாய் யாரென்று அடையாளம் கண்டும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத சோகம். அண்ணாமலையில் தந்தையின் நினைவாக உள்ள வீட்டை உடைந்ததால் இழந்த அடையாளம், பாண்டியனில் போலீஸ் அதிகாரி என்பதை மறைக்கும் அடையாளம், உழைப்பாளியில் முதலாளி என்று தெரியாமல் வேடமிடும் தொழிலாளி, வீராவில் இரண்டு பெண்களுக்கு நடுவில் கணவன் என்னும் அடையாளத்தை மறைக்க நினைப்பது, முத்துவில் ஜமீனின் வாரிசு தான் தான் என்று மறைக்கப்பட்ட அடையாளம், பாஷாவில் மறைக்கப்பட்ட கடந்தகால அடையாளம், அருணாச்சலத்தில் பெற்றவர்களை யாரென்று தெரிந்துகொண்டு தான் யாரென்று கண்டுகொண்ட அடையாளம், பாபாவில் சென்ற ஜென்மம் அடையாளம் தெரியாத இறை அருள் பெற்ற போக்கிரி, சிவாஜியில் எம் ஜி ஆர் ஆக அடையாளம் கொள்வது என்று பேட்டை திரைப்படம் வரை அடையாளத்தை மறைத்து வாழ்வது என்று அடையாளம் என்கிற முறையில் அதிகமான திரைப்படங்களில் பரிணமித்துள்ளார்.

இவருக்கு கதை எழுதும்போது இந்த முறை தானாக வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இவரின் திரைப்படங்களை பார்த்து பரிட்சையான கதாசிரியர்களுக்கு இந்த தாக்கம் அதிகமாக இருக்கும். சில படைப்பாளிகளுக்கு பாட்டேர்ன் என்னும் முறை கை கொடுத்திருந்தாலும் பலருக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. இந்த இயக்குனர் சென்ற திரைப்படங்களில் பயன்படுத்திய முறையையே மீண்டும் மீண்டும் பயன் படுத்துகிறார் என்றும் இந்த நடிகருக்கு ஓரே மாதிரி தான் நடிக்க, பேச வருகிறது. அதனால் எந்த கதாப்பாத்திரமானாலும் இந்த நடிகரே தெரிகிறார் என்று பார்வையாளர்கள் சலித்துக்கொள்வதுண்டு. படைப்பாளிகள் தங்களின் பாட்டேர்ன் என்னவென்று தெரிந்து தேர்வைக்கேற்ப பயன்படுத்துதல் நன்று.