குணா VS ஆளவந்தான் - கதாப்பாத்திர வடிவமைப்பு

 இரு வேறு விதமான தட்டை வடிவ கதாப்பாத்திர வளைவு (Two Different Flat Arc).
குணா:
கதாப்பாத்திர பங்கு (Character Role) - கதாநாயகன் (Protagonist)
கதாப்பாத்திர தரம் (Character Quality) - மாறா தன்மை (Static)
ஆளுமை பண்பு (Personality Trait) - உள்முக நபர்கள் (Introvert)
ஐ என் எப் பி வகையை சார்ந்தவர்கள் (INFP - Intuition, Feelings and Perceiving).
ஆளுமை பிரிவு (Personality Type) - பி வகை (B Type)

நந்து:
கதாப்பாத்திர பங்கு (Character Role) - நண்பனான எதிரி (Foil)
கதாப்பாத்திர தரம் (Character Quality) - மாறா தன்மை (Static)
ஆளுமை பண்பு (Personality Trait) - உள்முக நபர்கள் (Introvert)
ஐ என் எப் பி வகையை சார்ந்தவர்கள் (INFP - Intuition, Feelings and Perceiving).
ஆளுமை பிரிவு (Personality Type) - ஏ வகை (A Type)
குணாவிற்கும் நந்துவிற்கு உள்ள ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம்;

1. இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
2. இருவரும் மாயையான உலகத்திலே வாழ்கின்றனர்.
3. இருவரும் அவர்களின் மருத்துவரின் சொல்பேச்சை கேட்பவர்கள். 
4. குணா எப்படிப்பட்ட பூட்டையும் திறக்கும் புத்திசாலி என்றால் நந்து எல்லோரையும் ஏமாற்றி தப்பிக்க போடும் திட்டமே அவனின் புத்திசாலித்தனத்திற்கு சான்று.
5. குணா அபிராமி அந்தாதி போன்ற பாடல்களால் ஈர்க்கப்படுகிறான். நந்து தானே கவிதைகளை வடிக்கிறான். இருவருக்கும் தமிழ் மீது இருக்கும் பற்றை வெளிப்படுத்துகின்றனர். 
6. குணாவிற்கு அபிராமி வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். நந்து தன் தம்பியை காப்பாற்ற என்னவேண்டுமானாலும் செய்வான்.  
7. குணாவும், நந்துவும் கொல்லப்பட வேண்டியவர்களாக மற்றவர்கள் கருதுகிறார்கள்.
8. குணாவின் கதை மனநல காப்பகத்தில் தொடங்கி கொடைக்கானல் என்னும் மலை பிரதேசத்தில் முடிகிறது. நந்துவின் கதை மனநல காப்பகத்தில் தொடங்கி ஊட்டி மலையில் முடிகிறது. 
9. நந்துவிற்கும் குணாவிற்கும் பயம் என்பதே கிடையாது.
10. குணா மலையில் இருந்து விழுந்து தன் முடிவை தானே தேடிக்கொள்கிறான். நந்துவும் காஸ் சிலிண்டரை வெடிக்கச்செய்து தன் முடிவை தானே தேடிக்கொள்கிறான்.

குணாவிற்கும் நந்துவிற்கு உள்ள வேற்றுமைகள்;

1. இருவருக்கும் இருக்கும் காரணங்கள் வேறு. குணாவிற்கு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் ஆனால் நந்துவிற்கு தன் தம்பியை காப்பாற்ற வேண்டும். 
2. நந்துவிற்கு ஒரு பின் கதை உண்டு ஆனால் குணாவிற்கு அது அழுத்தமாக கட்டப்படவில்லை. 
3. குணா ஆதரிக்கப்பட்டவன் ஆனால் நந்துவோ விரட்டப்பட்டவன்.
4. குணாவிற்கு கோவம் ஒரு தற்காப்பு. இதனாலேயே உயி சேதங்கள் இருப்பதில்லை. ஆனால் நந்துவிற்கு அது பாதுகாப்பு. தன்னை பாதுகாத்துக்கொள்ள, தன் லட்சியம் நிறைவேற கோவப்படுகிறான்.
5. குணாவை மற்றவர்கள் பயன் படுத்திக்கொள்கின்றனர். ஆனால் நந்துவோ மற்றவர்களை தனக்காக பயன் படுத்திக்கொள்கிறான்.
6. குணாவின் உடலமைப்பும் நந்துவின் உடலமைப்பும் வேறு வேறு. அவர்களின் இலக்கை வைத்தே உடலமைப்பும் தீர்மானிக்கப்படுகிறது. குணா மலைமேல் ஏறவேண்டியதால் சாதாரண தேகமும் நந்து பல பேரை கொள்ளவேண்டி இருப்பதால் கட்டுமஸ்தான உடலமைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
7. குணா "பி" வகை ஆளுமையை சார்ந்ததால் பௌர்ணமிக்காக பொறுமையாக காத்திருந்து தன் காரியங்களை சாதித்துக்கொள்கிறான். நந்துவோ "ஏ" வகையை சார்ந்தவன் என்பதால் ஒரு விதமான மன அழுத்தம் வெறித்தனமாக மாறுகிறது.