திரைக்கதையின் இலக்கணத்தை உடைக்கலாமா?

இது ஒரு மாய வளையம். சினிமா மொழியும், சினிமா இலக்கணமும் ஒன்றோடு ஒன்று கலந்தது. இரண்டையும் தனித்தனியே பிரிக்க இயலாது. உதாரணமாக, சினிமாவின் மொழியை மக்களிடம் காட்சி வழியே சேர்க்க பெரும் உதவியாக இருப்பது;

  • கேமரா, லென்ஸ், போகஸ் மற்றும் அதன் அசைவுகள் (Camera, Lens, Focus and Movement).
  • காட்சிப்படுத்துதலும், அரங்கேற்றப்படுத்துவதும் (Mis-en-Scene).
  • ஒளி (Lighting).
  • இசை மற்றும் சப்தம் (Sound, Voice and Music).
  • படத்தொகுப்பு (Editing).
  • நடிப்பு மற்றும் செயல் (Performance).

காகிதத்தில் நாம் என்ன எழுதியிருந்தாலும் அதை மேலே சொன்ன வழிகளின் மூலம் மட்டுமே மக்களிடத்தில் நாம் கொண்டு சேர்க்க முடியும். கேமரா அசைவுகள் மூலமாக ஒரு விஷயத்தை சொல்லமுடியும். ஆனால் அதை ஒரு திரைப்படம் முழுமையாக பயன்படுத்த இயலாது. வண்ணங்கள் மூலமாக கதை சொல்ல முடியும் ஆனால் இரண்டு மணிநேரம் வண்ணங்களை மட்டுமே வைத்து கதை சொல்ல இயலாது. மக்களின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடும். ஒரு நடிகர் உலகிலேயே சிறந்தவர் என்பதால் எல்லா காட்சிகளிலும் அவரையே காட்டிக்கொண்டிருக்க முடியாது.

இப்படி முடியாது என்று சொல்லும் பொழுது தான் அதற்குள் ஒரு இலக்கணம் இருப்பது தெரிகிறது. இலக்கணத்தை உடைத்து கதை சொல்ல முடியும். ஆனால் அது ஓரிரு திரைப்படத்தில் வெற்றி பெறலாம். காரணம் அதன் கதைக்கு அப்படிப்பட்ட தேவை இருக்கும். எல்லா கதைகளுக்கும் இலக்கணத்தை உடைத்து கதையையோ, காட்சியையோ உருவாக்கமுடியாது.

காலையில் எழுந்தேன், பற்களை விளக்கினேன், காபி குடித்தேன், குளித்தேன், சிற்றுண்டியை சாப்பிட்டேன், வேலைக்கு சென்றேன் என்பது ஒரு நேரியல் (linear) கதை சொல்லி முறை.

காலையில் எழுந்தேன், இன்றைக்கு எப்படி சிற்றுண்டியை சாப்பிடுவேன் என்று கண்களை மூடி நினைத்தேன், வேலைக்கு சென்றால் எங்கு என்ன பிரச்சனை என்பது என் மனதிற்கு வந்தது, பிறகு பற்களை விளக்கினேன், காபி குடித்தேன், குளித்தேன், சிற்றுண்டியை சாப்பிட்டேன், வேளைக்கு சென்றேன் என்பது ஒரு நேரியல் அல்லாத (Non-linear) கதை சொல்லி முறை.

ஆனால் இலக்கணத்தை அடைகிறேன் என்று எழுதுபவர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள். காலையில் எழுந்தேன், சிற்றுண்டியை சாப்பிட்டேன், பற்களை விளக்கினேன், குளித்தேன், காபி குடித்தேன்,  வேலைக்கு சென்றேன் என்பதில் நேரியாலும் இல்லை அது அல்லாத கதை சொல்லும் முறையும் இல்லை. 

மக்கள் நாம் சொல்லவருவதை காட்சியாகவோ, வசனமாகவோ, உணர்வாகவோ புரிந்துகொண்டால் போதும், எந்த இலக்கணத்தையும் நாம் உடைக்கலாம். நாம் பழையதை உடைத்து புதிதாக உருவாக்கும் விஷயங்களும் இலக்கணத்திற்குள் ஓர் அங்கமாகி விடுகிறது. அதை உடைக்க ஒருவர் நினைக்கலாம்.