மூன்று விதமான எழுத்தாளர்கள் ஒரு சம்பவம் - வேறுபாடும் பார்வை

 ஒரு சம்பவத்தை (Event) மூன்று விதமான திரைக்கதாசிரிகள் (Visual, Auditory and Kinesthetic) நேரில் பார்க்கிறார்கள். அதை அவர்கள் காட்சியாக எழுதும் பொழுது இப்படி இருக்கும்;

காட்சி திறன் உள்ள எழுத்தாளர் (Visual Trait) - உச்சி வெயிலில் ஒரு பெண் கோட் சூட் அணிந்துகொண்டு கடை வீதியில் வந்துகொண்டிருக்கிறாள். அவளது நீல நிற பேகை தலையில் வைத்து வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். தலையிலிருந்து கண்கள் வழியாக வியர்வை ஊற்றிக்கொண்டே இருக்கிறது. அதை வெள்ளை நிற கர்சீப்பால் துடைக்க, ஒரு திருப்பத்தில் பச்சை நிற சன்டிரோ ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை வேகமாக உரசி சென்றது. வலது கையில் நன்றாக அடிப்பட்டு வீங்கிவிட்டது. வெய்யிலின் தாக்கம் வேறு கை வலி வேறு அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அருகில் இருக்கும் பழ கடைக்கு சென்று அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்.

ஒலித்திறன் உள்ள எழுத்தாளர் (Auditory Trait) - மதியம் பன்னிரண்டு மணி. கீதா இன்டெர்வியூவை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். சரியாக இன்டெர்வியூ போகவில்லை என்கிற வருத்தம் வேறு. அதுமட்டும் அல்லாமல் அவளது தொலைபேசியில் பேட்டரி இல்லாததால் ஆட்டோ, கார் ஏதும் புக் செய்ய முடியவில்லை. சாலையிலும் யாரும் இல்லை. இன்னும் வீடு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது நடந்தால் கூட வீட்டிற்கு செல்ல அரை மணிநேரமாவது ஆகும். அருகில் உள்ள பழ கடையில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்லலாம் என்று நினைத்தாள். அவளது கைக்குட்டையை எடுத்து வழியும் வியர்வையை துடைப்பதற்குள் ஒரு கார் அவளை வேகமாக உரசிச்சென்றது. திரும்பிப்பார்க்கும்பொழுது வண்டி எண் T N 45 AJ 5544 என்று எழுதியிருந்தது. அதை மனதிற்குள் பதியவைத்தபடியே பழ கடையில் வந்து அமர்ந்தாள்.

உணர்வுத்திறன் உள்ள எழுத்தாளர் (Kinesthetic trait) - கீதா இன்டெர்வியூவை முடித்துவிட்டு ஒரு எரிச்சலுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள். இப்படியெல்லாமா இன்டெர்வியூவில் கேள்வி கேட்பார்கள்? அங்கேயே அந்த அதிகாரியை நாக்கை பிடுங்குவது போல ஒரு கேள்வி கேட்டிருக்க வேண்டாமா என்று அவளையே அவள் திட்டிக்கொண்டிருந்தாள். இந்த வெயிலுக்கு ஜில்லென்று பழசாறு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று மனதில் கற்பனை செய்து பார்த்தாள். அவளும் அவளின் தோழி கலாவும் எப்பொழுதும் வரும் கடை அது. அவளது கைக்குட்டை எடுத்து முகம் துடைக்கும்பொழுது அது பல நாட்களாக துவைக்காமல் இருந்ததை உணர்ந்தாள். இன்றைக்கு வீட்டிற்கு சென்றவுடன் அதை துவைத்துவிடவேண்டும் என்று தீர்மானித்தாள். அந்த நேரத்தில் ஒரு கார் அவளை வேகமாக உச்சரிச்சென்றது. பசி மயக்கம் வேறு, இன்டெர்வியூவில் சொதப்பியது வேறு, இப்பொழுது இந்த கை வலி வேறு என்று அவளை வாட்டி வதைத்தது. அந்த வலியுடன் பழ கடையில் சென்று அமர்ந்தாள்.

இதில் யாருடைய எழுத்து பெரியது, யாருடையது சிறியது என்பதல்ல நான் சொல்ல வந்த நோக்கம். ஒவ்வொரு திறனிலும் ஒரு நிறை, குறை இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சாதுர்யமான எழுத்தாளர்களுக்கு எப்படி இந்த மூன்று திறனையும் கலந்து அருமையான படைப்பாக தரவேண்டும் என்று தெரியும். மூன்று வகையான திரை எழுத்தாளர்களும் மற்ற திறன்களை கற்றுக்கொண்டால் பிரபலமான எழுத்தாளராக மாறிவிடலாம்.