"ரங்கு" - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

 "ரங்கு... ரங்கு" 

ரங்குவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. டீ கடையையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள் ரங்கு.

மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம் என்று அவளின் தோழி சுந்தரி அழைத்தாள்.

"ரங்கு" என்று அவளின் காதில் வந்து கத்தினாள். ரங்கு திரும்பி பார்த்தாள்.

"என்னடி. நான் பாட்டுக்க கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். அந்த டீ கடையையே பார்த்திட்டு இருக்கியே" என்றாள் சுந்தரி.

"அடி போடி. பசி மயக்கம் காத அடைக்குது. எவனாவது வருவனான்னு ரொம்ப நேரமா பார்த்திட்டு இருக்கேன்." என்றாள் ரங்கு.

பிறகு அவளே தொடர்ந்தாள் "இன்னைக்கு ஏதாவது ஸ்டிரைக்கு குய்க்கு சொன்னாங்களா. எவனையும் கடை பக்கம் காணும்?"

"நீ சீக்கிரம் வந்துட்டடி. இப்போதான் கடைக்காரன் பாலையே காய்ச்சுறான். என்ன இன்னைக்கு வழக்கத்தை விட சீக்கிரம் பசி வந்திருச்சா?" என்றாள் சுந்தரி.

"நேத்து ராத்திரி என் புருஷன் கூட சண்டை. சாப்பிடவே இல்லை." என்றாள் ரங்கு.

"அப்படி என்னடி சண்டை" என்றாள் சுந்தரி.

"நான் அட்டை மாதுரி ரத்தத்தை குடிக்கிற ஜந்துவாம். ஒருத்தரையும் இந்த ஊர்ல விட்டு வைக்கறதில்லையாம். அப்படி இப்படினு கத்திகிட்டே இருந்தான். அதான் காண்டாயிடுச்சு." என்றாள் ரங்கு. மீண்டும் அலுத்துக்கொண்டு தொடர்ந்தாள் "இவ்ளோ காலையிலேயே எவன காலி பண்ண போறேன்னு கேட்கறேன். என்னோட குணத்தை எப்படி மாத்துறது?"

"நம்மளோட பிறவி குணமே இதுதானே" என்று சுந்தரி சொல்லிக்கொண்டிரும்பொழுதே சண்டியர் சங்கர் அந்த டீ கடைக்குள் நுழைந்தான். சுந்தரி அவன் வருவதை ரங்குவிடம் காட்டினாள். 

"ஐயோ. இந்த பயலா? இவன் குடிகாரன். இவனோட உடம்புல ரத்தமே ஓடல, ஒரே குடி தான். இவன் பக்கத்துல போனாலே எனக்கு மயக்கம் வருது, வாந்தி வருது." என்று அலறினாள் ரங்கு. 

"அப்போ நான் போறேன்" என்று சொன்ன சுந்தரியை தடுத்தாள் ரங்கு.

"டீ கடைக்குள்ள போகாதே. அந்த கடையோட ஓனர் கரண்டு கம்பியை வச்சிருக்கான். நம்ம ஜலஜா எப்படி செத்து போனான்னு தெரியுமா? இப்படித்தான். நானும் ஒரு நாள் தெரியாம உள்ள போயிட்டு ஷாக் அடிச்சி உயிர் பொழச்சி வந்ததே பெரிய விஷயம். அதுனால தான் நான் கடைக்குள்ள போறதில்ல." என்றாள் ரங்கு.

விவேகன் வந்துகொண்டிருந்தான். ரங்குவிற்கு ஒரே குஷி.

"சுந்தரி. இவனை தெரியுமா? ரொம்ப நல்லவன். ஈ, எறும்புக்கு கூட துரோகம் பண்ண மாட்டான். யாரையும் அடிக்கறதோ, கொல்றதோ இல்லை. நம்ம கூட்டாளி பரமேஸ்வரி சொல்லித்தான் இவன எனக்கு தெரியும். ரொம்ப இனிமையானவன்." என்று கண்ணை மூடி அந்த இனிமையின் ருசியை நினைவு படுத்திப்பார்த்தாள் ரங்கு. அவளுக்கே தெரியாமல் அப்படி ஒரு புன்னகை.

விவேகன் டீ கடைக்குள் சென்றான். அவன் வெளியே வந்ததும் அவனிடம் போகலாம் என்று காத்திருந்தாள் ரங்கு.

"சுந்தரி. எப்போ உன்னோட பொண்ண வெளியே கூட்டிட்டு வரபோற? நாம செய்யுற வேலைய பார்த்திட்டே இருந்தா தானே அவளுக்கும் பழக்கம் ஆகும்." என்றாள் ரங்கு.

"இப்பத்தாண்டி பொறந்திருக்கா. அவளுக்கு வாயே சரியா வளரல. கொஞ்ச நாள் போகட்டும். எனக்கென்னமோ அவ என்ன மாதுரி பெரிய இடது மனுஷங்களோட பழகுவான்னு தெரியல. பக்கத்துல ஒரு பெரிய சாக்கடை இருக்கு. அவசரத்துக்கு வரவன், தம்மடிக்கறவன், பொண்ண தள்ளிட்டு வர்றவன்னு நெறய பேர் வர இடம். அவளோட கண்ணு அவங்க மேலதான் இருக்கு. அவ, அவளோட சித்தி போல வருவான்னு நினைக்கிறன்." என்றாள் சுந்தரி. 

"நூறு பேர் சேர்ந்து ஒருத்தனோட ரத்தத்த குடிக்கறதுக்கும், ஒத்தையா ஒரு ஆளோட ரத்தத்தை குடிக்கதும் வித்யாசம் இருக்கு. எதுடி கெத்து.?" என்றாள் ரங்கு. சுந்தரியும் ரங்குவிற்கு சாதகமாக தலையசைத்தாள். விவேகன் டீ கடையில் இருந்து வெளியே வந்து ஒரு பலகையின் மீது அமர்ந்தான். ரங்குவிற்கு ஒரே குஷி.

"உன் புருஷன் சொன்ன மாதுரி அட்டை போல ரத்தத்தை உறிஞ்சிறதே." என்று சிரித்தாள் சுந்தரி.

"அடி போடி. எவ்ளோ பசியா இருந்தாலும் நான் குடிக்கபோறதென்னவோ நாலு சொட்டு தான்." என்று சொன்ன ரங்கு என்னும் கொசு விவேகனை நோக்கி சென்றது. தூரத்தில் இருந்து சுந்தரி கொசுவும் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

விவேகன் மேல் ரங்கு உட்கார்ந்து ரத்தத்தை குடிக்க ஆரம்பித்தாள். ஒரே அடி. அதே இடத்தில ரத்தமும் சதையுமாக உரு குலைந்து இறந்து போனாள் ரங்கு.

"என்னங்க கொசு உட்காந்திருக்கு. அது கூட தெரியாம ஜடம் போல உட்கார்ந்திருக்கீங்களே." என்று சண்டியர் சங்கர் கொசுவை அடித்த பெருமையை பீற்றிக்கொண்டிருந்தான்.

- சாய் விஜேந்திரன்