சினிமாவை யாராலும் கற்றுக்கொள்ள முடியாது. அதெல்லாம் பிறவியிலேயே இருக்கவேண்டும்?!

 நம்மால் யாருக்கும் வீரத்தை கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் போர் தந்திரங்களை கற்றுக்கொடுக்க முடியும். வீரம் என்பது பிறவி குணம். வெறும் வீரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நம்மால் எதிரிகளின் யுக்திகளை ஜெயிக்க முடியாது. எப்பேர்ப்பட்ட வீர தீர அரசனாக இருந்தாலும் ஆலோசனை சொல்ல ஒரு குரு தேவை. அதனால் தான் அரசர்கள் ராஜா குருவை சபை அமர்த்தினார்கள். அந்த ராஜா குருவால் வீரத்தை கற்றுக்கொடுக்க முடியாது ஆனால் போர் முறைகளை கற்றுக்கொடுக்க முடியும். அரசரின் பலம் என்ன பலவீனம் என்ன, படைகளை எப்படி நகர்த்தவேண்டும், யார் யாருக்கு எப்பொழுது ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் போன்றவற்றை ராஜகுரு சொல்கிறார். 

இப்படி சொல்வதால் ராஜாவிற்கு அறிவு மட்டும் வீரம் இல்லை என்பது பொருள் இல்லை. மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து பார்த்தால் தான் அரசரின், ராஜ்யத்தின் பலம் மற்றும் பலவீனம் வெளிப்படும். அப்படி வெளிக்கொணரும் தகவல்களை வைத்துக்கொண்டு புதிய யுக்திகளையும், போர் தந்திரங்களையும், ஆயுதங்களையும் தயார் செய்துகொள்ள வேண்டும். இரும்பு மற்றும் குதிரையின் திறன் தெரியாததால் ஒரு நாகரீகமே அழிந்தது கடந்தகால வரலாறு. 

இந்த முறையையே எல்லா விளையாட்டு போட்டிகளிலும் செயல்படுத்துகிறார்கள். கிரிக்கெட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். சச்சின் டெண்டுல்கருக்கோ, கோலிகோ, தோணிக்கோ கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்க முடியாது, ஆர்வத்தை கற்றுக்கொடுக்க முடியாது. ஆனாலும் அவர்களுக்கு பயிற்சியும், வழிகாட்டுதலுக்கும் ஒரு பயிற்சியாளர் தேவைப்படுகிறார். அவர்கள் எவ்வளவு புகழ் அடைந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு போட்டிக்கு முன் அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. எந்த நாட்டுடன் விளையாடும்பொழுது, என்ன மாதிரியான ஷாட்டை அடிக்கும்பொழுது அவுட் ஆகிறார்கள் என்று பயிற்சியாளர் ஆலோசனை தந்து நெறிப்படுத்துகிறார். இது அவர்களுக்கு இழுக்கு இல்லை. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் புதிய விளையாட்டு யுக்திகளை கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் தேவைப்படுகிறார்.

இப்பொழுது சினிமா துறைக்கு வருவோம். நடிப்பு, பாட்டு, நடனம், கதை, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க முடியுமா? நடிப்பு என்பது ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும், நான் எப்படிப்பட்ட கதையை சொல்லவேண்டும் என்று ஏன் மற்றவர் எனக்கு பயிற்சி தரவேண்டும்? என்று பலர் இங்கே சொல்வதை கேட்டிருக்கிறேன். உண்மையை சொல்லவேண்டுமானால் இவற்றை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் நடிப்பின், பாடுவதில், கதை எழுதுவதில் இருக்கும் புதிய யுக்திகளை கற்றுக்கொடுக்க முடியும். இப்படி கற்றுக்கொள்வதை இழுக்காக பார்க்காதீர்கள். 

சினிமா கேமராவை பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தொழில்நுட்பங்கள், லென்ஸ், லைட்ஸ் போன்றவை மாறிக்கொண்டே வருகிறது. அந்த மாற்றங்களை தெரிந்துகொண்டு தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு வருபவர்கள் நிலைக்கிறார்கள். இவ்வளவு அனுபவம் இருந்தும் நான் ஏன் இன்னும் மாணவனை போல் பணம் செலவு செய்து புதிய தொழில் நுட்பத்தை படிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் இந்து களத்தில் இல்லை. கேமரா ரீலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறும்பொழுது மாறாமல் இருந்தவர்கள் இந்து எங்கே இருக்கிறார்கள்?

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடிப்பின் பண்புகள் மாறிக்கொண்டே வருகிறது. கதை சொல்லும் விதங்கள் மாறிக்கொண்டே வருகிறது. நல்ல குரல் வளம் உள்ளவர்களுக்கு ஏற்ற இரங்ககங்களுடன், இசைக்கு ஏற்றவாறு, சுருதி, தாளத்தோடு படவேண்டும் என்று இசை அமைப்பாளர் சொல்லித்தருகிறார். இப்படி செய்வதால் அந்த பாடகரை ஏளனமாக பார்ப்பதாக நினைக்க கூடாது. 

அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்பு யார் சினிமாவிற்கு பயிற்சி தந்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம். தொடக்க காலத்தில் எல்லாம் ஒரு செய்முறை போலவே இருந்தது. அவர்கள் எடுத்த காட்சி நன்றாக வந்துள்ளதா என்பதை பார்க்க பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நேரம். வருடங்கள் ஓட ஓட ஏன் சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது, ஏன் பல திரைப்படங்கள் தோல்வியை தழுவுகிறது என்று யோசித்ததன் விளைவாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்றது. ஒவ்வொரு திரைப்படத்தையும் பிரித்து பார்க்க ஆரம்பித்தார்கள். ஒரு பைக் மெக்கானிக் ஸ்கூட்டரை பாகம் பாகமாக கழற்றி மீண்டும் மட்ட கற்றுக்கொள்வதுபோல் சினிமாவை ஆராய்ந்து சினிமாவை கற்றுக்கொண்டார்கள். 

புகழ் பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் வீடியோக்களை அலசி ஆராய்ந்து, பந்தை எப்படி பிடிக்கிறார், வேகம் எங்கிருந்து வருகிறது, எப்பொழுதெல்லாம் விக்கெட் எடுக்கிறார், யாரையெல்லாம் வீழ்த்தியிருக்கிறார் என்கிற தரவுகை பார்த்து கற்றுக்கொள்வது போல் தான் சினிமாவும். யாரெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்களோ அவர்களுக்கு ஒரு தரவு கிடைக்கிறது. அதை தானே வைத்துக்கொண்டு சுயநலமாக இல்லாமல் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள். சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லித்தருகிறார்கள், சிலர் கல்லூரி வைத்து சொல்லித்தருகிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி நேரமும், பயிற்சி நேரமும் இலவசம் இல்லை என்பதால் அதற்கு ஒரு கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். 

உதவியாளர்களாக கற்றுக்கொள்ளும்போளுது நம்முடைய நேரத்தை கொடுத்து பயிற்சியை ஒரு குருவிடம் இருந்து பெறுகிறோம். எவ்வளவு அனுபவம், புகழ், பணம் இருந்தாலும் வளரும் தொழில்நுட்பத்தை, யுக்திகளை கற்றுக்கொண்டே இருப்பவர்கள் தான் நீடித்து நிலைக்கிறார்கள்.