பந்தயம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை

 மணிக்கூண்டில் ஐந்து மணியை காட்டியது. மாலை நேரம்.

'கனகு', ஒரு பழைய வீட்டின் வாசலில் அவனுடைய கூட்டாளிகளோடு காத்திருந்தான். 

அந்த வீட்டின் முகப்பின் இரும்பு கேட் உடைந்து துரு பிடித்திருந்தது. வீட்டின் எல்லா புறத்திலும் மழை பெய்து, கரை படிந்திருந்தது. பெயருக்கு கூட பெயிண்ட் எங்கும் தெரியவில்லை. பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது அந்த வீடு. தொடர்னு சத்தமும், கூச்சலும் அந்த வீட்டில் இருந்து வந்துகொண்டிருந்தது. 

'லட்சுமி' பேய் அறைந்தாற்போல் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தாள். கனகுவை பார்த்து பதட்டத்துடன் சொன்னாள்

"அது வீடே இல்லை. அங்கே இருப்பது எல்லாம் பேய்கள், பிசாசுகள், கோட்டான், கொள்ளிவாய் பேய்" என்று அடுக்கிக்கொண்டே போனாள். பிறகு தொடர்ந்தாள் "நான் பந்தயத்தில் தோத்துட்டேன். என்னால ஒரு நாளெல்லாம் அந்த வீட்டில் இருக்க முடியாது." என்று கூறிவிட்டு அருகே இருந்த ஒரு வேப்ப மரத்தை நோக்கி சென்றாள்.

கனகுவின் கூட்டாளி சதியா "டேய் கனகு, இந்த அம்மா எவ்வளவு நேரம் அந்த வீட்டில் இருந்துச்சு?" என்று கேட்டான்.

அதற்கு கனகு "மூன்று மணிநேரம்" என்று சொல்லி சிரித்தான்.

சத்யா சொன்னான் "பரவா இல்லடா இருந்தாலும் இந்த அம்மாவுக்கு ரொம்ப தெரியம். நானெல்லாம் ஒரு மணிநேரம் கூட தாக்கு பிடிக்கல. எனக்கு அப்பறம் போன வசந்த், சந்துரு, கோபி, மேனகா எல்லாம் ரெண்டு மணிநேரத்துக்கு கம்மி தான்."

மறுநாள் நாள் சோமு, கனகுவிடம் கேள்வி ஒன்றை கேட்டான் "இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த மரத்தடியிலேயே தங்குறது?"

கனகு பதில் சொன்னான் "அடுத்த பயணத்திற்கான தகவல் தலைவரிடம் இருந்து வரும் வரை இங்கே தான் இருந்தாகனும்." 

சோமு சொன்னான் "அது சரி. இப்படியே எவ்வளவு நாள் இங்கே இருக்கறது. ரொம்ப போர் அடிக்குது."

"அதுக்கு தானே இந்த உள்ளே வெளியே விளையாட்டு, பந்தயம் எல்லாமே. போர் அடிச்சா அந்த வீட்டுக்குள்ள பொய் உட்காருங்க." என்று சொல்லி சிரித்தான் கனகு.

"ஏன்டா. எங்களை எல்லாரையும் உள்ள அனுப்பினே. நீ எப்ப போறதா இருக்கே?" என்றான் சத்யா.

இந்த கேள்வியை கனகு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கூட்டாளிகள் எல்லோரும் அவனையே பார்ப்பது போலவும், கேள்வி கேட்பது போலவும் அவனுக்கு தோன்றியது. ஒரு விதமாக உள்ளே செல்ல தன்னை தயார் படுத்திக்கொண்டான்.

மாலை ஆறு மணி. எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு "எப்படி காது போல உள்ள போய், காத்து போல வெளியே வரேன்னு பாருங்க." என்றான் கனகு.

இவன் என்ன கதி ஆகப்போகிறானோ என்று கூட்டாளிகள் நினைத்தனர்.

கனகு அந்த வீட்டின் உள்ளே நுழைந்தான். ஆங்காங்கே சில இடங்களில் வெளிச்சமும், நிறைய இருளுமாக இருந்தது அந்த வீடு. ஹாலில் ஒரு சோபா இருந்தது. அதற்கு பின்னே சென்று உட்கார்ந்துகொண்டான். அங்கிருந்து பார்த்தால் வீட்டில் உள்ள எல்லா மூலைகளும் அவனுக்கு நன்றாக தெரிந்தது. சட்டென்று ஒரு விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சத்தில் அந்த ஹால் மிகவும் சுத்தமாக இருப்பது தெரிந்தது. பொருட்கள் வைத்தது வைத்தபடி இருந்தது. பயம் கொள்வது போல் அப்படி என்னதான் இந்த வீட்டில் இருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது.

அடுத்த கணம் ஒரு கொலுசு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தான். காலே தெரியாத அளவிற்கு பாவாடையுடன் ஒரு பெண் நடந்து சமையல் அறைக்குள் போவதை பார்த்தான். வெளிச்சம்  வந்ததும் ஒவ்வொரு அறையில் இருந்தும் இரண்டு உருவங்கள் தெரிந்தது. மொத்தம் ஐந்து உருவங்கள் அவனுக்கு தெரிந்தது. வெள்ளையும் ஜொள்ளையுமாக ஒரு ஐம்பது வயதிற்கு மேல் உள்ள ஆண். தலைவிரிகோலமாக அதே வயது ஒத்த ஒரு பெண். என்பது வயதில் ஒரு ஆண் மற்றும் பெண். இருபத்தி ஐந்தில் ஒரு பெண் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டான். ஒரு நாள் என்ன? ஒரு மாதம் கூட இங்கே தாக்கு பிடிக்கலாம் என்று நினைத்தான். பந்தயத்தில் ஜெயித்து கூட்டாளிகளையும் இந்த வீட்டிற்குள் தங்க வைக்க நினைத்தான்.

"ஆறு மணி ஆச்சு. யாருக்காவது விளக்கு போடணும்னு தோணிச்சா?" இளம் பெண்.

"நான் தான் எப்பொழுதும் போடுறேன். இன்னைக்கு ஒரு நாள் போட்டுட்டு பேசாதே!" அப்பா சொன்னார்.

"ஏன் நானும் தான் போட்டிருக்கேன். என் பேரை சொல்ல மாடீங்களே. நீங்கெல்லாம் இப்படித்தான்" என்றாள் அம்மா.

'சரி சரி சண்டை போடுக்காதீங்க" என்றார் தாத்தா.

'உங்க அப்பாவுக்கு இது மட்டும் கேட்டுடுமா? தினமும் காட்டு கத்து கத்தறேன். அப்போல்லாம் நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லும்." என்றாள் அம்மா.

"இதோட இந்த பேச்ச நிறுத்திக்கலாம். சண்டை வேணாம்." என்றார் அப்பா.

"அதானே பார்த்தேன். என் பக்கம் இருக்கற நியாத்தை எப்போ தான் பேசியிருக்கீங்க? இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்." என்றாள் அம்மா.

தலையில் அடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார் அப்பா. 

"நான் சொல்றத எப்போ முழுசா கேட்டுருக்கீங்க. ஓடி போய்டுங்க. போய் உங்க அம்மா மடியில படுத்துக்கங்க." என்றாள் அம்மா.

"ச்சூ. ஒரு விளக்குக்கா இவ்வளவு பிரச்சனை. என் புள்ளைய கொஞ்ச நேரம் கூட நிம்மதியா உட்கார விடமாடியே. எப்ப பார்த்தாலும் கரைச்சி கொட்டிக்கிட்டே இரு." என்று தன் வேதனையை கொட்டினாள் பாட்டி.

"எல்லாரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா." என்று கண்டித்த மகள் அப்பாவை பார்த்து கேட்டாள். "எனக்கு புது டிரஸ் வாங்கித்தரேனு சொன்னேங்களே! எப்போ வாங்கித்தறீங்க."

"அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கண்ணா" என்றார் அப்பா.

"அவரை நம்பினா ஒன்னும் கிடைக்காது. நான் வாங்கித்தரேன்" என்றாள் அம்மா. பின்பு அவளே தொடர்ந்தாள் "போன மாசம் படத்துக்கு போகணும்னு சொன்னியே கூட்டிட்டு போனாரா? இவரை நம்பினா போஸ்டரத்தான் காட்டி கூட்டிட்டு வருவாரு."

"ஏன் நான் படத்துக்கே கூட்டிட்டு போனதில்லையா? டிரஸ் வாங்கித்தந்ததில்லையா?" என்று ஆதங்கத்தை கொட்டினார் அப்பா.

"அவளுக்கு டிரெஸ் வாங்கும்போது எனக்கும் ஒரு டிரஸ் வேணும் சொல்லிட்டேன்." என்றாள் அம்மா.

"எங்களுக்கும் கல்யாண நாள் வருதுடா தம்பி" என்று பாட்டி தன்னுடைய பங்கை கேட்டாள்.

"சரி அடுத்த மாச விஷயம் அடுத்த மாசம் பார்ப்போம். வேற ஏதாவது நல்லதா பேசுங்க." என்றார் அப்பா.

"இந்த வீட்டுல நல்லதா?" என்று ஏளனமாக சிரித்தாள் அம்மா. 

கனகுவிற்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்? யாராவது விட்டுக்கொடுத்து பேசலாமே என்று நினைத்தான்.

சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு அம்மா தொடர்ந்தாள் "ஏங்க. அந்த கிரைண்டர் சரியில்ல. அடுத்த மாசம் உங்க சம்பளம் வந்ததும் மாத்திடலாமா?"

அப்பா சிரித்துக்கொண்டே மகளிடம் சொல்கிறார் "இப்ப எப்படி வளைஞ்சி, கொளஞ்சி பேசறா பாரு. அவளுக்கு ஒரு வேலை நடக்கணும்னா சிரிப்பா. இல்லேன்னா தலையில ஏறி மிதிப்பா." 

பாட்டிக்கு மகன் சொன்ன வார்த்தைகள் தேனாக காதில் வந்து பாய்ந்தது.

"எப்போ நான் எறிஞ்சி விழுந்திருக்கேன் சொல்லுங்க?" என்று ஒன்றும் தெரியாதது போல் அம்மா கேட்டாள்.

"இது உலக மகா நடிப்புடா சாமி" என்றாள் பாட்டி.

"இதுக்கு மேல ஏதாவது பேசினீங்க அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை. போனா போகுது மாமியாருன்னு பார்த்தா ரொம்ப தான் தலைக்கு மேல ஏறுறீங்களே! மாமியாரும் அம்மா மாதிரின்னு நெனச்சிதான் உங்கள நடத்துறேன்." என்றாள் அம்மா.

"உங்க அம்மாவை இப்படித்தான் நடத்துவியா? சரியான நேரத்துல காபி தண்ணி இல்லை, சூடா கேட்டா சலிச்சுக்கற. பாத்திரத்தை 'லொட்டு'ன்னு போடுற. ஒன்னும் சொல்ற மாதுரி இல்ல." என்றாள் பாட்டி.

இவர்களின் தவறை போய் சொல்லிவிடலாமா என்று ஒரு நிமிடம் நினைத்தான் கனகு. பிறகு நாம் சொல்லி இவர்கள் கேட்கவா போகிறார்கள். நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தான். இவர்களின் பேச்சு அவனுக்கு பெரிய உளைச்சலை தந்தது. இதற்க்கு முன் மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து ஒரு குடும்பம் பேசுவதை அவன் பார்த்ததே இல்லை. அவனும் பிரச்சனையில் இருந்திருக்கிறான். ஆனால் அப்பொழுதெல்லாம் அவனுக்கு யார் என்ன பேசுகிறார்கள், ஏன் பேசுகிறார்கள், எதற்காக பேசுகிறார்கள் என்கிற தெளிவு இல்லை.

சண்டைக்கு பிறகு வீடு களேபரமாக மாறியது. சுத்தமாக இருந்ததெல்லாம் அலங்கோலமாக மாறியது.

"மதியம் தான் சுத்தம் செஞ்சு வச்சேன். அதுக்குள்ள வீட்டை இப்படி பண்ணிடீங்களே. யாராவது இந்த வீட்டுக்குள்ள வரமுடியுமா?" என்று அலுத்துக்கொண்டார் தாத்தா.

உடனே அம்மா ஆரம்பித்தாள் "நானும் தான் தினமும் சுத்தம் செய்றேன்." அதைக்கேட்டு அப்பா அறைக்குள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.

மூன்று மணிநேரம் ஆகியது. இரவு ஒன்பது மணி. உணவு அருந்தும் வேளை. யாரும் சாப்பிட வருவதாக தெரியவில்லை. ஒவ்வொரு மூலையில் ஒவ்வொன்றாக முட்டிக்கொண்டு நின்றது. பிறகு மகள் சமாதானம் பேசி எல்லோரையும் சாப்பிட உட்கார வைத்தாள்.

"இப்போவே சொல்லிட்டேன். நான் சாப்பிடுற வரைக்கும் அவளை பேசக்கூடாதுன்னு சொல்லுங்க." என்றாள் பாட்டி.

"நான் சும்மா தான் இருக்கேன். நீங்க உங்க தட்டை பார்த்து சாப்பிடுங்க." என்றாள் அம்மா.

"எனக்கு சோறு போட்டு தயிர் போடு போதும்." என்றார் அப்பா.

"நா கஷ்டப்பட்டு சமச்சத்து யாருக்காக? வெளிய நிக்கற நாய்களுக்கா? நாளைலேந்து வெறும் சோறு, தயிர் வைக்க போறேன். யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்க சாப்பிடுங்க. இல்லாதவங்க வெளிய போய் சாப்பிடுங்க." என்றாள் அம்மா.

கனகுவிற்கு தூக்கி வாரி போட்டது.

"இதுக்கு தான்டா நான் அப்பவே சொன்னேன். இவை கூட சாப்பிட மாட்டேன்." என்றாள் பாட்டி.

"ஏன் அந்த சோத்த தட்டுல தூக்கி போடுறீங்க? என் மூஞ்சில போடவேண்டியதுதானே? அவ்வளவு ஆக்ரோஷம் என்மேல." என்று தலையை திருப்பிக்கொண்டாள் அம்மா.

"அதுவும் ஒரு நாள் நடக்கத்தான் போகுது. நீ சமைச்ச லட்சணத்துக்கு உன் மூஞ்சில தான் போடணும்." என்றாள் பாட்டி.

தாத்தா, அப்பா, மகள் என யார் சொல்லியும் இருவரும் கேட்பதாக தெரியவில்லை. சண்டை முற்றிக்கொண்டு ஒருவரை ஒருவர் சாடினார். சிறிது நேரத்தில் தட்டில் இருந்த சோற்றை கையில் பிசைந்து, உருட்டி பந்து போல் செய்தார்கள். ஒருவரை ஒருவர் சோற்றால் தக்கிறார். ஒருவருக்கொருவர் சோற்றுக்குளியல் செய்து கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்..

இன்னும் இதற்கு மேல் இங்கிருந்தால் வாழ்க்கையின் மீது இருந்த பற்று அறுந்துவிடும் என்று பயந்து கனகு வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த வீட்டின் வாசலில் உள்ள ஒரு பலகையில் இப்படி எழுதியிருந்தது "குடும்பம் ஒரு கோயில்." அதைப்பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு அவனின் கூட்டாளிகள் இருக்கும் திசையை நோக்கி நகர்ந்தான்.

கனகுவின் கூட்டாளிகள் ஆரவாரம் செய்தார்கள். அவனின் தோல்வியை கண்டு சிரித்தார்கள். ஒன்றுமே புரியாமல் பிரமை பிடித்தவனாக கனகு அவனின் கூட்டாளிகளிடம் இப்படி சொன்னான் "பேயான நம்மாலேயே இந்த மனுஷங்க வீட்டுல இருக்க முடியலையே. அந்த மனுஷங்களாம் எப்படித்தான்டா அந்த வீட்டுல இருகாங்க!?'

கூட்டாளிகள் அமைதியானார்கள்.