"இதெல்லாம் பழைய பானீங்க (Old Method). இப்பலாம் இப்படி திரைக்கதை எழுதறதே இல்ல". கோடம்பாக்கம் மட்டும் அல்ல, உலக திரைக்கதாசிரியர்களின் பிரச்சனை இது. ஓல்ட் ஸ்கூல் ஆப் தாட், நியூ ஸ்கூல் ஆப் தாட் பற்றி பார்ப்பதற்கு முன் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவை பார்க்கலாம். வசனங்களால் நிரப்பப்பட்ட காட்சிகள், சொல்வதை நீளமாக சொல்வது, மீண்டும் மீண்டும் சொல்வது போன்றவைகள் இருந்தது.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை இயற்கையாகவே மக்களின் ரசனை மாறிக்கொண்டே வருகிறது. வசனத்தின் நீளமும் ஒவ்வொரு பத்து ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருகிறது. இன்று "ஆரம்பிக்கலாங்களா" என்று சொல்வதற்கே இடைவேளை வரை காட்சிகள் தேவைப்படுகிறதது. வசனங்களின் நீளம் மிகவும் குறைந்து காட்சியின் தன்மை அதிகரித்துவிட்டது.
இந்த பதிவின் நோக்கம் எந்த திரைக்கதை பாணி சரியானது என்று வாதாடுவது அல்ல. அறுபது வருடங்களுக்கு முன்னால் இருந்த இளைஞர்கள் போட்ட உடைகளின் வண்ணம், வடிவைமைப்பு எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த இளைஞர்களுக்கு அவுட் டேட்டட் பேஷன் (காலாவதியாகிவிடுகிறது). அது போல் இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு வேறு விதமான ரசனை உடைகளில் இருக்கிறது. இது உணவு, கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. திரைக்கதையும் அப்படித்தான் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு முன் இருந்த பணியில் இருந்து மற்றவர் வேறுபடுத்தி இருப்பார்கள்.
இதனால் நான் சொல்லவந்தது இதைத்தான்;
அந்த அந்த பத்து வருடங்களுக்குள் திரைக்கதாசிரியராகவோ, இயக்குநராகோ ஆகவில்லை என்றால் நாமும், நம் திறமையும் காலாவதியாகிவிடும்.
அப்படி இல்லையெனில் புதிய பணியை கற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. எது சிறந்ததோ அதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் ஈகோவிற்கு வேலை இல்லை.
புதிதாக திரைக்கதை வடிவமைக்கும் யாரையும் விமர்சனம் செய்ய தேவை இல்லை. நம்மால் அப்படி எழுதி சாதிக்க முடிந்தாலும் சரி, இல்லை நம்முடைய பாணியை பயன் படுத்தி சந்தித்தாலும் சரி. கடைசியில் தயாரிப்பாளரில் இருந்து மக்கள் வரை அனைவரும் திருப்தி அடையவேண்டும்.
பக்கம் பக்கமாக எழுதி தள்ளியிருக்கிறேன். என்னுடைய திரைக்கதை மொத்தம் இருநூறு பக்கம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். எங்கே காட்சி மூலமாக, வசனம் மூலமாக, உணர்ச்சி மூலமாக கதை சொல்லவேண்டும் என்று உணர்ந்து திரைக்கதை செய்தால் நம்முடைய திறன் காலாவதியாகாமல் இருக்கும்.