சினேகா வழக்கத்தை விட அன்று சந்தோஷமாக இருந்தாள். அவளுடைய முதலாம் ஆண்டு திருமண நாள். கணவன் மாறன் இரவு 'கேண்டில் லைட் டின்னர்' தயார் செய்து வைக்கும்படி சொல்லிவிட்டு வேலைக்கு சென்று இருந்தான். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரும் வாழ்த்தி விட்டார்கள். உச்சகட்ட சந்தோஷத்தில் புது வகையான உணவுகளை யூ டியூப் மூலமாக கற்று சமைத்து டைனிங் டேபிளின் மேல் சினேகா வைத்திருந்தாள். இரவு எட்டு மணி. சினேகா ஓடி சென்று கதவை திறந்தாள். மாறனை பார்த்து வெட்கப்பட்டாள். ஆனால் மாறனோ கடுங்கோபத்தில் இருந்தான். அவனுடைய தோற்றம், உடை, உணர்வுகள் என்று எல்லாமே அவளுக்கு புதிதாக இருந்தது.
"வாங்க. உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன். ஏன் இவ்ளோ லேட்?" என்று கேட்டாள் சினேகா.
அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அவளை லேசாக உள்ளே தள்ளி விட்டான். கதவை பட்டென்று சாத்தினான்.
"உனக்கும் பிரதீபுக்கும் என்ன தொடர்பு?" என்று கேட்டான் மாறன்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத சினேகா "யாரு பிரதீப்? ஒன்னும் புரியலையே?" என்றாள்.
"நடிக்காதடி. எனக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு. இனிமே என்ன ஏமாத்த முடியாது." என்றான் மாறன். பிறகு அவனே தொடர்ந்தான் "எவ்ளோ நாளா எனக்கு தெரியாம இது நடக்குது. உன்ன அவ்வளவு காதலிச்சேனே, நீ எனக்கு குடுக்குற பரிசு இதுதானா? போயும் போயும் உன்ன கல்யாணம் பணிகிட்டேனே என்ன சொல்லணும்." என்று சொல்லும்பொழுதே சட்டையில் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை வெளியே எடுத்தான் மாறன்.
"என்னங்க இது விளையாட்டு? திருமண நாள் அதுமா!" என்றாள் சினேகா.
"உன்னோட வண்டவாளம் எல்லா தெரிஞ்சுருச்சேன்னு பயப்படுறியா?" என்று சினேகாவின் கையை பிடித்து கத்தியால் லேசாக கீறினான் மாறன்.
பதட்டத்தில் கத்த ஆரம்பித்தாள் சினேகா.
"நீ செய்த துரோகத்துக்கு உனக்கு மரணம் தான் பரிசு" என்று கர்ஜித்தான் மாறன்.
சட்டென்று சிநேகாவிற்கு ஒரு விஷயம் புரிந்தது. அவளுடைய மொபைல் போன் எங்கே என்று தேடினாள். அதை எடுக்க போகும்பொழுது மாறன் அவளுடைய பின்னால் கத்தியை வீசினான். அவளுடைய ஜாக்கெட்டின் பின்புறம் கிழிந்தது. பதறிக்கொண்டு ஓடினாள். மாறனும் விடுவதாய் இல்லை. அவள் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினாள். வேர்வை ஆறாக ஓடியது. எப்படியாவது அந்த மொபைல் போனை எடுத்துவிடவேண்டும் என்று நினைத்தாள். இப்படி ஒரு நாளை அவள் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால்....
"என்ன இப்படி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைச்சி கூட பாக்கல மாறா" என்று சினேகா சொன்னாள். காற்று ஜில்லென்று வீசியது. பிறகு அவள் தொடர்ந்தாள் "ஊட்டி, கோடைக்கானல்னு எங்க போயிருந்தாலும் இப்படி ஒரு அழகு பார்க்கமுடியாது. என்ன எப்படி இம்ப்ரெஸ் பண்ணனும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு" என்றாள்.
மாறனின் வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் இருவரும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்து பார்த்தால் சென்னையின் அழகு நன்றாக தெரியும்.
"அப்பாகிட்ட நம்ம லவ் பத்தி பேசிட்டியா? என்ன சொல்றார்?" என்று கேட்டான் மாறன்.
"அவருக்கு உங்களோட வேலை தான் பிரச்சனை. அத விட்டுட்டு வர முடியுமான்னு கேட்டார். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்." என்றாள் சினேகா. அதை கேட்டது மாறனுக்கு பெருமையாக இருந்தது.
"நீ என்ன நம்புறில்ல அதுவே போதும். ஒரு நாள் அவரை பாத்து தெளிவா பேசிடறேன்." என்றான் மாறன்.
நிகழ்காலத்தில் சினேகா அந்த அறையில் தவித்து கொண்டிருக்கிறாள். கதவை மெதுவாக திறந்து பார்த்தாள். வெளியே யாருமே இல்லாதது போல் இருந்தது. கதவை திறந்து ஹாலில் உள்ள அவளுடைய மொபைல் போனை எடுத்தது தான் தாமதம். எங்கிருந்தோ வந்து கத்தியை அவள் மேல் குத்த சென்றான் மாறன். சினேகா தட்டி விட்டதால் அது சோபாவின் மேல் குத்தி உள்ளே இருந்த பஞ்சு வெளியே வந்தது. நல்ல வேளை அவன் வருவதை அவள் கவனித்தாள் இல்லையென்றால் அந்த சோபாவிற்கு நேர்ந்தது தான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். உடனடியாக அவளுடைய மொபைல் போனை தூக்கிக்கொண்டு வேறொரு அறைக்கு சென்று பூட்டிக்கொண்டாள்.
"நீ எங்கே போனாலும் உன்ன விடமாட்டேன். எனக்கா துரோகம் செய்யுறே? உன்னையும் அந்த பிரதீபையும் கொன்னு ஒரே குழியிலே பொதைக்குறேன். அங்க போய் டூயட் பாடுங்க." என்று சைக்கோவாக கத்தினான் மாறன்.
சினேகா மொபைல் போனில் உள்ள நம்பர்களை தேடி ஷில்பாவிற்கு போன் செய்தாள். அவள் எடுக்கவே இல்லை. ஷில்பா இப்படி செய்ஞ்சிருக்க கூடாதுன்னு அவள் மேல் கோவப்பட்டாள். தன்னுடைய கணவரின் பலவீனம் என்னவென்று தெரிந்தும் இப்படி செஞ்சிட்டாளேன்னு அவள் மேல் கோபம் வந்தது.
ஒரு வருடத்திற்கு முன்னால்...
சினேகாவும் அவளது குடும்பமும் மாறனின் வீட்டிற்கு வந்தார்கள். மாறன் அவர்களை நன்றாக உபசரித்தான். சினேகாவின் அப்பாவிற்கு மாறனை ரொம்ப பிடித்துவிட்டது.
"உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பெரியவங்க மேல நீங்க வச்சிருக்கிற மரியாதையை பார்த்தேன். வீட்டை அழகா வச்சிருக்கீங்க. ஆனா உங்க வேலை தான் எனக்கு பிடிக்கல. நான் ஓப்பனா பேசுறேனேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க." என்றார் சினேகாவின் அப்பா.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. என்னோட வேலை அப்படி. நான் பொண்ணுங்க பின்னாடி சுத்துவேன், தண்ணி, தம்மு அடிப்பேன்னு நெனச்சிக்காதீங்க. எனக்கு எந்த பழக்கமும் இல்ல. சினேகாவை கல்யாணம் பண்ணி வையுங்க மாமா. காலம் பூரா கண் கலங்காம நான் பாத்துக்கறேன்." என்றான் மாறன். உடனே அவரின் காலிலும் விழுந்தான்.
ஆனால் இப்பொழுது சினேகா தனி அறையில் அழுதுகொண்டிருக்கிறாள். சில்பா அவளுக்கு கால் செய்தாள்.
"ஏ ஷில்பா. என்ன இப்படி பண்ணிட்டே? இன்னைக்கு எங்க திருமண நாள். அவரு வெளியே கத்திய வச்சிக்கிட்டு ரகளை பண்ணிட்டு இருக்கார். வீடே ரணகளம் ஆயிடுச்சு. அவரை பத்தி தான் உனக்கு தெரியும்ல. இப்படி பட்ட அசைன்மென்ட்லாம் தரலாமா?" என்று பட படப்போடு கேட்டாள் சினேகா.
"ஏன் டென்சன் ஆகுறீங்க? அவரு போகும்போது சொல்லணும்னு நெனச்சேன், என் புருஷன் போன் பண்ணி புலம்பனதுனால மறந்துட்டேன்." என்றாள் ஷில்பா.
"என்ன இவ்ளோ கூலா சொல்ற. என்னோட உயிரே போயிருக்கும். உடனே அவர்கிட்ட பேசு." என்று கண்டிப்போடு சொன்னாள் சினேகா.
உடனே மாறனின் மொபைல் போன் அடித்தது. ஷில்பாவின் அழைப்பை பார்த்து மாறன் குதூகலத்துடன் எடுத்தான்.
"ஷில்பா. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவ என்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டா? பிரதீபோட அவளுக்கு இருந்த தொடர்பு எனக்கு தெரிஞ்சி போச்சு. அவளை இன்னைக்கு ரசிச்சு ரசிச்சு கொல்ல போறேன்." என்று கண்களையெல்லாம் சுருட்டி காட்டினான் மாறன்.
"ஐய்யோ சார். உங்களுக்கு அந்த ரோல் இன்னைக்கு மட்டும் தான். நாளையிலேந்து பாசக்கார புருஷனோட சீன்ஸ் எடுக்கறாங்களாம். உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். உங்க மெத்தட் அக்டிங்லேந்து வெளிய வாங்க. நான் அனுப்பறம் பாசக்கார புருஷனோட சீன்ஸை வாட்சப்ல அனுப்பறேன் படிச்சுட்டு தயார் ஆய்டுங்க. அப்பறம் ஹேப்பி ஆனிவேர்சரி சார்." என்று புகழ் பெற்ற மெத்தட் ஆக்டிங் கிங் என்று சொல்லப்படுகிற நடிகர் மாறனின் பி.ஏ ஷில்பா போன் அழைப்பை துண்டித்தாள்.
மாறன் அவனுடைய கண்களை ஒரு நிமிடம் மூடினான். அவனுடைய கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்தான். முகத்தில் அவ்வளவு சந்தோசம்.
"எங்க இருக்கே டார்லிங். ஹாபி ஆனிவேர்சரி டியர். ஐ லவ் யூ சோ மச்." என்று குதூகலத்தில் கத்தினான் மாறன்.
கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள் சினேகா.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் "காற்றிலே மெல்லிய காதல்" படத்தில் நடித்துக்கொண்டிருந்தான். ஒரு வருடங்களுக்கு முன்பு "பெரியோர்களுக்கு மரியாதை" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தான் மாறன்.