ராமசாமியின் ரகசியம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை

தலைவர் ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான வயிற்று வலியால் ஒரு வாரமாக துடித்த காப்பான்பட்டி ஊரின் தலைவர் ராமசாமி இன்று மருத்துவமனையில் சேர்ந்தார். நடுத்தர வயது, சாதாரணமான தோற்றத்திலேயே எப்பொழுதும் இருப்பார். சுற்றுவட்டார பதினெட்டு பட்டிக்கும் இவர் சொல்வது தான் தீர்ப்பு. நல்ல நீதிமான் என்று பெயர் வாங்கியவர். யாருடைய சொத்திற்கும் ஆசைப்படாதவர் என்று இவருக்கு ஊரில் பெயர் உண்டு. பெரிய தர்மவான், ஏழைகளின் காப்பாளன் என்று இவரை பாராட்டுவார்கள். இவ்வளவு புகழையும் ஒரு நாளும் இவர் தலைக்கு ஏற்றிக்கொண்டதில்லை. 

இவரின் மனைவி ராணிக்கு இவர் மேல் அதீத பிரியம். உலகம் போற்றும் நல்ல கணவர் அமைந்துவிட்டார் என்கிற பெருமையும் இறுமாப்பும் இவருக்கு எப்பொழுதுமே இருக்கும். ராணி ஜாடிக்கு ஏற்ற மூடி. அவர் சொல்லை மீறாதவர். கணவனே கண் கண்ட தெய்வம் என்று நினைப்பவர். இன்று கணவனின் இந்த நிலையை எண்ணி கண்ணீர் சிந்துகிறார்.

காப்பான்பட்டியில் பெரிய மருத்துவமனை இல்லாததால் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டவுன் பெரியாஸ்பத்திரியில் பரிசோதிக்க வந்தார். ஒரு வாரம் ஆகியும் வயிற்று வலி குறையாததால் ஒரு நாள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரின் தாய், உடன்பிறப்புக்களுக்கு சொல்லி அனுப்பினார். பெரிய டாக்டர் அழைப்பதாக நர்ஸ் சொன்னாள்.

"டாக்டர் என் புருஷனுக்கு என்ன ஆச்சு? நாளைக்கு அவர வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்ல?" என்றார் ராணி.

"இப்போ தான் ரிப்போட்ஸ் வந்திருக்கு. ஏன் இவ்வளவு நாளா தாமதிச்சீங்க? இன்னும் ஒரு மாசம் அவர் உயிரோட இருந்தாலே பெரிய விஷயம்." என்றார் பெரிய டாக்டர்.

"ஐயோ. டாகடர் என்ன சொல்றீங்க? அவருக்கு என்ன ஆச்சு? உண்மைய சொல்லுங்க." என்று கண்ணீர் வழிந்தபடி பதட்டப்பட்டார் ராணி.

"என்னம்மா அழுவுறீங்க? இது ஆசுபத்திரி. மொதல்ல அழாதீங்க. நான் சொல்றத கவனமா கேளுங்க. விஷயம் முத்திப்போச்சு. உடம்புக்குள்ள ஒரு உறுப்பும் வேலை செய்யல. இவருக்கு டிரீட்மென்ட் குடுத்தா வேஸ்ட்." என்றார் டாக்டர்.

"என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க. எங்க குல தெய்வம் அவரு. அவருக்கு எப்படி இப்படி ஒரு நோய் வரும். ஒரு கெட்ட பழக்கமும் அவருக்கு இல்லை." என்றார் ராணி.

"என்ன? கெட்ட பழக்கம் இல்லையா? நா கூட பொய் சொல்லலாம் ஆனா இந்த ரிப்போட்ஸ் பொய் சொல்லாது." என்றார் டாக்டர். இதைக்கேட்டதும் ராணிக்கு எதுவுமே புரியவில்லை. அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை என்று கேட்டார்.

"இந்த ரிப்போட்ச்செல்லாம் பாக்கும்போது உங்க புருஷனுக்கு சின்ன வயசுலேர்ந்தே சிகரெட், தண்ணி பழக்கம் இருந்திருக்கணும்." என்றார் டாக்டர்.

"ஐயோ டாக்டர். அவர் கூட பதினஞ்சு வருஷமா குடும்பம் நடத்துறேன். அவருக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை." என்றார் ராணி. 

"பொதுவா இது மாதுரி தவறான பழக்கம் இருக்கறவங்க ஊருக்கு எதிர்ல ஒரு மாதிரியும், வீட்டுல ஒரு மாதிரியும் இருப்பாங்க. அப்பறம் இன்னொரு விஷயம். இவருக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கறது உண்மை. நாடி நரம்பெல்லாம் ரொம்ப தளர்ந்திடுச்சு." என்று டாக்டர் சொன்னதும் கண்ணெல்லாம் இருட்டாக ராணிக்கு மாறியது.

அதற்குள் ராணியின் அம்மா, அண்ணன் அங்கே வந்தார்கள். நடந்த விவரங்களை கேட்டுக்கொண்டார்கள். ராமசாமி இவ்வளவு வருடங்களாக அவர்களை ஏமாற்றியது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. 

"இப்போ என்னமா பண்றது. இத நான் எதிர்பார்க்கவே இல்ல." என்று அம்மாவின் மேல் விழுந்து அழுதார் ராணி.

"முதல்ல சொத்து பத்து, பணம், நகை எல்லாம் எங்க இருக்குனு தெரிஞ்சுக்கோ. நீ ஒரு பயித்தியக்காரி. எப்போ பார்த்தாலும் அந்த ஆளோட புகழே படிக்கிட்டு இருந்த. ஆனா யாரு யாருக்கோ அவர் அள்ளி கொடுத்திருக்கார். சே சே இப்படிப்பட்ட அயோக்கியன நான் பார்த்ததே இல்ல. பொண்டாட்டி இருக்கும்போது எப்படித்தான் பல பொண்ணுங்க கிட்ட போறாங்களோ." என்று அவருடைய மனக்குறையை மகளின் மீது கொட்டினார் ராணியின் அம்மா.

ஐ.சி.யூ வில் இருந்த ராமசாமியை வார்டிற்கு மாற்றினார்கள். ராமசாமி அவரின் மனைவியை பார்க்க விரும்புவதாக நர்ஸ் சொல்லிவிட்டு போனாள்.

"இங்க பாரு தங்கச்சி. இப்போவாவது புத்திசாலியா நடந்துக்கோ. என்ன மிச்சம் மீதி இருக்கோ உடனே உன் பேர்ல எழுதி வாங்கிக்கோ. அப்பறம் என்ன வச்சிருந்தாருன்னு ஊரு ஊரா போய் பஞ்சாயத்துல நிக்க வேண்டியது தான். வீட்டுக்கு வரட்டும் அந்த ஆள உண்டு இல்லேனு பண்றேன் பாரு." என்றார் அண்ணன்.

ராமசாமியை பார்த்ததும் கண்ணீர் தரை தரையாக ராணிக்கு வந்தது. விக்கி விக்கி அழத்தொடங்கினார்.

"அடியே. இது ஆசுபத்திரி. இங்க இப்படிலாம் அழக்கூடாது. எனக்கு ஒன்னும் இல்ல பாரு. நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம்னு டாக்டர் சொல்லிருக்கார்." என்றார் ராமசாமி.

"எனக்கு எப்படிங்க இப்படி ஒரு துரோகத்தை செய்ய உங்களுக்கு மனசு வந்திச்சு. உங்களுக்கு அப்படி என்ன குறை வச்சேன்?" என்று மீண்டும் அழுதார் ராணி.

"உன் பேருக்கு ஏத்தாப்போல நீ ராணியாத்தானே இருக்கே. என்னையும் ராஜாவா இருக்க விட்டே!" என்றார் ராமசாமி. ராணியின் தலையை தடவி கொடுத்து "நீ எப்பவுமே என்னோட ராணி தான்." என்றார்.

டாக்டர் சொன்னதையெல்லாம் ராணி விவரமாக சொன்னார்.

"ஏய். அது எதுவும் உண்மை இல்ல. யார் அப்படி சொன்னா கூப்பிடு அவன." என்று கோபப்பட்டார் ராமசாமி.

"அதுக்கு அவசியமே இல்ல. உங்க ரிப்போட்ஸ் உங்கள காட்டி குடுத்திருச்சு." என்று ராணியின் அண்ணன் வார்டு அறைக்குள்ளே வந்தார்.

"உங்கள எப்படில்லாம் நெனச்சிருந்தோம். இப்படி பண்ணிடீங்களே மாப்ளே!?" என்றார் ராணியின் அம்மா.

"இந்த ஆளுக்கு என்னம்மா மரியாதை. நம்ம வீட்டு பொண்ணோட வாழ்க்கையை கெடுதிருக்கான். இவனெல்லாம் சும்மா விட கூடாது." என்று அண்ணா கர்ஜித்தார். பிறகு தொடர்ந்தார் "வெளியில வாங்க உங்க மரியாதை ஊர்ல எப்படி காத்தோட காத்தா பறக்குதுன்னு."

"என்ன மச்சான் இப்படி பேசுறீங்க? நான் அப்படி செய்யுற ஆளா?" என்றார் ராமசாமி.

"அண்ணன் மேல ஏன் கோவப்படுறீங்க. அவர் சொன்னதுல என்ன தப்பு. வயக்காட்டுல தண்ணி பாய்ச்சணும்னு அடிக்கடி நீங்க சொல்லிட்டு போகும்போதெல்லாம் வெகுளியா தலையை தலையை ஆட்டினேன். எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்." என்று தலையில் அடித்துக்கொண்டார் ராணி. ராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ராணி தொடர்ந்தார் "சரி. போனது போகட்டும். எனக்கும் என் புள்ளைங்களுக்கு என்ன மிச்சம் வச்சிருக்கீங்க. எவ்ளோ பணம், சொத்து, நகைங்க மிச்சம் இருக்கு? இருக்கா இல்லே எவளுக்காச்சும் குடுத்துடீங்களா?" என்று நையாண்டி கலந்து ராணி பேசினார்.

"யோவ். அதான் தங்கச்சி கேட்குதுல்ல உண்மைய சொல்லு. சொன்னா மாப்பிளேங்கற மரியாதை மிச்சம் இருக்கும். இல்லேன்னா இந்த தடவ நான் பஞ்சாயத்தை கூப்டுறேன்." என்றார் அண்ணன்.

"என்ன எல்லாரும் மரியாதை கெட்டு பேசிகிட்டு." என்று வருத்தப்பட ராமசாமி ராணியை பார்த்து "ராணிம்மா. நான் இப்படிப்பட்டவன்னு நீயே முடிவு பண்ணிட்டியா." என்று வருத்தத்துடன் கேட்டார். அப்பொழுது அவருடைய மூக்கில் இருந்து கொஞ்சம் ரத்தம் வந்தது.

"பாத்தியா! மூக்கிலேந்து ரத்தம் வருது. கண்ட கண்ட பொண்ணுங்க கிட்ட போனா இப்படித்தான். ஒண்ணுமே பண்ணாதவனுக்கு ஏன் இப்படி வரணும்? நீ இன்னும் ஒரு மாசம் கூட உயிரோட இருக்கப்போறதில்ல. அப்பறம் ஏன்யா இவ்வளவு வறட்டு கவுரவம். பேசாம உண்மைய சொல்லிட்டு ஆஸ்திய என் பேர்ல எழுதி வச்சிரு." என்று கண்டிப்பாக சொன்னார் ராணி. ராமசாமிக்கு அவரின் மனைவி இப்படி பேசுவது விசித்திரமாக இருந்தது. 

"என்ன பாக்குற? உன்ன மாதிரியான ஆளுங்களுக்கு எதுக்கு மரியாதை." என்று அம்மாவும் அவ மரியாதையாக பேசினார்.

"இன்னும் என்னென்ன ரகசியத்தை என்கிடேந்து மறைக்குற?" என்றார் ராணி.

"என்னோடது எப்பவுமே சிதம்பர ரகசியம்தான்." என்றார் ராமசாமி 

அப்பொழுது பெரிய டாக்டர் அந்த அறைக்குள் வந்தார். 

"ஐயா. உங்க முழு பெயர் என்ன?" என்று கேட்டார்.

'ராமசாமி முருகையன் டாக்டர்." என்றார் ராமசாமி.

"ஓ அப்படியா. இன்னொருத்தரு அட்மிட் ஆகியிருக்கார். அவரோட பேரு ராமசாமி முத்தையன். அந்த பெயர் குழப்பத்துல உங்க ரிப்போட்ஸ் மாறிடுச்சு. ஐ அம் வெரி சாரி. உங்க ரிப்போட்ஸ் நல்லா இருக்கு. வெறும் வயித்து வலிதான். நார்ஸ்கிட்ட சொல்லி டேப்ளெட்ஸ் அனுப்பறேன். ஒன்னும் இல்ல சார் நீங்க சுகமா இருக்கீங்க." என்று அவரை தட்டிக்கொடுத்துவிட்டு ராணியை பார்க்காமலேயே டாக்டர் சென்றுவிட்டார்.

ராணி, அண்ணன் மற்றும் அம்மா ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர். 

ராமசாமி கட்டிலில் இருந்து இறங்கி துண்டை ஒரு முறை உதறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.