புரிதல் - சாய் விஜேந்திரனின் சிறுகதை

 "அப்பா... அப்பா" என்று சந்தோஷ் அழைத்தான்.

சோபாவில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் கண்விழித்து பார்த்தார். சந்தோஷ் எதிரில் நின்றிருப்பதை பார்த்து அவனுக்கு ஒரே ஆச்சர்யம். சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். கணேஷை கட்டிப்பிடித்தான் சந்தோஷ்.

"ஹேப்பி ஆனிவேர்சரி அப்பா" என்று கணேஷை கட்டி அணைத்தான் சந்தோஷ். கணேஷால் இதை நம்பவே முடியவில்லை. ஒரு வருடமாக பேசாத சந்தோஷ் இன்று என்னுடன் பேசுகிறானா என்று கணேஷிற்கு ஆச்சர்யம். நேற்று இரவு சந்தோஷிடம் தன்னுடைய மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டிவிட்டார் கணேஷ். அவருக்கும் மனதில் இருந்த பாரம் குறைந்துவிட்டது. சந்தோஷிற்கும் ஒரு தெளிவு கிடைத்துவிட்டது.

அம்மா ரேகா அங்கே வந்தாள். சந்தோஷ் அவளையும் கட்டி அணைத்து "ஹேப்பி ஆனிவேர்சரி அம்மா" என்றான். 

ரேகாவும் கணேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. இதனிடையே சந்தோஷ் தொடர்ந்தான் "அப்பா நீங்க தான் இன்னைக்கு என்ன ஸ்கூல்ல விடணும். ஒகே?" என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.

ரேகா கணேஷின் அருகில் வந்து உட்கார்ந்தாள். அப்பொழுது கணேஷ் "என் புள்ள என்கிட்ட பேசிடாம்மா" என்று சொல்லும்பொழுது அவரின் கண்கள் கலங்கியிருந்தது. "ஒரு வருஷமா என்ன பாக்கவும் இல்ல பேசவும் இல்ல. ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு. நான் தப்பு பண்ணிட்டேனோன்னு ஒரு குற்ற உணர்வு இருந்துச்சு. நல்ல வேலை அதெல்லாம் இப்ப காணாம போய்டுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா" என்று தொடரும்பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. 

சில மணி நேரங்களில் சந்தோஷ் பள்ளிக்கு தயார் ஆனான். கணேஷ் அவனை பின்னால் ஏற்றிக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விமானத்தில் போவது போல் உணர்ந்தார். சந்தோஷ் கணேஷிடம் பேசிக்கொண்டே வந்தான்.

"அப்பா உங்களுக்கு தெரியுமா? என்னக்கு புடிச்ச டீச்சர் கலைவாணி தான். அவங்க தமிழ் வகுப்பு எடுக்கும்போது அவ்வளவு ரசனையோடு எடுப்பாங்க. நான் வளர்த்து தமிழ் ஆசிரியர் ஆயிடவா?" என்று கேட்டான்.

கணேஷ் பெருமையுடன் தலையை அசைத்தார். சந்தோஷ் தொடர்ந்து பேசினான் "இந்த ராஜேஷ் இருக்கான்லபா ரொம்ப நாட்டி பெலோ. என்னோட ஸ்னாக்ஸ், டிபிஎன் பாக்ஸ் எல்லாத்தையும் காலி பண்ணுவான். ஆனா அவனை யாராலும் ஒன்னும் பண்ண முடியல. ரொம்ப பலசாலி." என்றான். அதற்கும் கணேஷிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. மகன் பேசிய சந்தோஷத்தில் இருந்தார்.

"இனிமே நீங்களே தினமும் என்ன ஸ்கூல்ல விட்டுட்டு, திரும்ப கூட்டிகிட்டு வறீங்களா?" என்று சந்தோஷ் கேட்டதற்கு தலையை அசைத்தார் கணேஷ். பின்பு சந்தோஷ் சொன்னான் "அடுத்த வருஷம் பத்தாவது போறேன்ல. அதனால எக்ஸட்ரா கிளாஸ்லாம் போடுவாங்க. நீங்க இருந்து என்ன கூட்டிகிட்டு வறீங்களா?" என்றான். 

சந்தோஷின் ஸ்கூல் வந்தது. பைக்கில் இருந்து கீழே இறங்கி சந்தோஷ் "ரொம்ப தேங்க்ஸ்பா. ரொம்ப சாரிபா. இனிமே நான் உங்கள நல்லா பார்த்துப்பேன்." என்றான். அதற்கும் கணேஷிடம் இருந்து பதில் இல்லை. சந்தோஷத்தில் கணேஷ் தலையை மட்டுமே அசைத்தார். வாயில் ஒரே சிரிப்பு. அதே உத்வேகத்துடன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினார்.

கணேஷ் ரேகாவின் இரண்டாவது கணவர். சந்தோஷ் பிறந்து சில மாதங்களில் அவனின் அப்பா ஒரு விபத்தில் காலமானார். பல வருடங்களாக துணை இல்லாமல் இருந்த ரேகாவிற்கு சந்தோஷின் எதிர்காலம் கருதி சில முடிவுகள் எடுக்க வேண்டியதாகியது. சந்தோஷின் அப்பா வழி உறவினர்கள் கணேஷை பற்றி தவறாக அவனிடத்தில் சொல்லி வைத்திருந்தனர். கணேஷிற்கும் ரேகாவிற்கும் திருமணமாகி ஒரு வருட காலம் அன்றுடன் நிறைவு பெறுகிறது. சந்தோஷிடம் அவர் மனம் விட்டு பேசி அம்மாவின் முடிவு எவ்வளவு சரி என்று அவர் சொன்னது அவனுக்கு புரிந்தது. 

சந்தோஷ் அவனுடைய தோழி தேவியை விரும்புகிறான். ஒரு வேளை அவர்களுக்கு திருமணம் முடிந்து சந்தோஷ் இறந்துவிட்டால் அந்த பெண் வாழ்க்கை முழுவதும் தனியாக சந்தோஷையே நினைத்துக்கொண்டு வேதனை அனுபவிப்பது அவனுக்கு விருப்பமாக இருக்குமா அல்லது உற்ற துணையை தேடிக்கொண்டு வாழ்க்கையை அழகாக்கிக்கொள்வது சரியாக இருக்குமா என்று அவனுடைய அம்மாவை தன்னுடைய காதலியின் இடத்தில் வைத்துப்பார்த்தான். அன்றிலிருந்து ஹாலில் உள்ள சோபா இரவில் காலியாகவே இருந்தது.