வழக்கத்தைவிட அந்த அருங்காட்சியகத்தில் இன்று ஒரே கூட்டம்.
இரண்டு வெளியுலக பிராணிகள் கையும் களவுமாக பிடிபட்டது. அதை தலை நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து தன் குடிமக்களுக்கு கட்டிக்கொண்டிருந்தார் தலைவர். அந்த அருங்காட்சியகத்தின் வாயிலில் தாயும் மகனும் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
"அம்மா. எப்பம்மா ஏலியன பார்க்கலாம்?" என்றான் மகன்.
"பொறுடா. டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனதும் பாத்துடலாம்." என்றாள் அம்மா.
டிக்கெட்டின் விலை இருநூறு மடங்கு அதிகமாக இருந்ததை அம்மா பார்த்தாள். மக்களிடம் இருந்து இந்த சந்தர்ப்பத்திலும் சம்பாதித்து விடவேண்டும் என்கிற தலைவனின் ஆர்வம் அவளை வியக்க வைத்தது. கஷ்டப்பட்டு டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் உள்ளே சென்றார்கள்.
ஆர்வம் அவர்களை தொற்றிக்கொண்டது. அருங்காட்சியகத்தின் மற்ற துறைகளைவிட ஏலியன்ஸ் துறையின் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தை நெருங்க நெருங்க ஆரவார சத்தம் கேட்டது.
"ஏலியன்...ஏலியன்" என்று கத்தினார்கள். பலவிதமான செய்கைகளை கட்டினார்கள். ஆனால் இரண்டு ஏலியன்களிடம் இருந்தும் அசைவு ஏதும் இல்லாததால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்.
"அம்மா. இதுதானா நீங்க சொன்ன ஏலியன்? ஏன் இப்படி இருக்கிறது? இப்படியெல்லாமா உடல் வாகு இருக்கும். பார்ப்பதற்கே கன்றாவியாக இருக்கு." என்றான் மகன். சிறிய மௌனத்திற்கு பிறகு மீண்டும் வருத்தப்பட்டு தொடர்ந்தான்.
"இதற்கு தானா இவ்வளவு கூட்டம். சொல்வது போல் ஒன்றும் இல்லையே."
"இதென்னடா இப்படி சொல்லிட்ட. உருவத்தை நல்லா பாரு. நாளைக்கு பள்ளிக்கு போனதும் ஆசிரியர் கேட்பாரு." என்றாள் அம்மா.
கூட்டமோ கையில் கிடைத்ததையெல்லாம் அந்த ஏலியனின் கூண்டை நோக்கி எறிந்தார்கள்.
"எங்க தாத்தா பறக்கும் எந்திரத்தை பார்த்தா என்கிட்ட சொல்லியிருக்கார். ஆனா அவரோட காலத்துல ஏலியன்ஸை பார்க்க முடியல. நானும் நீயும் ரொம்ப குடுத்து வச்சவங்க." என்றாள் அம்மா.
கூட்டத்தில் இருந்து ஒருவன் கத்தினான் "ஏலியன்ஸை பிடித்ததால் எங்கள் தலைவன் ஏலியன்ஸை வென்றவன்னு அன்போடு அழைக்கப்படுவர்."
மற்றவர்கள் அதை ஆமோதித்து கத்தினார்கள்.
"அம்மா. நம்ம தலைவரா இந்த ஏலியன்ஸை பிடித்தார்?" என்று கேட்டான் மகன்.
"மெதுவா பேசு. யாருக்காவது கேட்டுட போகுது. நம்ம இடத்தை ஆராய இந்த ஏலியன்ஸ் வந்திருப்பாங்க போல. அவங்களோட இயந்திரம் பழுதாகிடுச்சு. ஓடி போக நினச்சவங்கள ரெண்டு வீரர்கள் பிடிச்சிட்டாங்க. உடனே நான் தான் பிடிச்சேன் என்று தலைவர் பிரகடன படுத்திக்கிட்டார். அவரோட அடி பொடிகளும் அதையே சொல்லுது." என்றாள் அம்மா.
இந்த நேரத்தில் கூட்டிற்குள் இருந்து வினோதமான சத்தம் கேட்டு எல்லோரும் அமைதியானார்கள்.
"என்னடா நடக்குது. நாம என்ன பண்றோம் இங்கே?." என்று கத்தினான் பிரதீப்.
"பாத்தா தெரியலையா? கூட்டுக்குள்ள இருக்கோம்." என்றான் சுஜய்.
"இந்த நேரத்துலயா பார்த்து நம்மோட ஸ்பேஸ் ஷிப் வேலை பார்க்காம போகணும். பாரு வேவு பார்க்க வந்த இடத்துல இந்த ஏலியன்ஸ் உலகத்துல மாட்டிகிட்டோம்." என்றான் பிரதீப்.
"பாருடா. நல்லா பாரு. இவங்கள பார்க்கத்தானே வந்தோம். இவங்க வாழ்க்கை, கலாச்சாரம் என்னனு தெரிஞ்சிக்கத்தானே வந்தோம்." என்றான் சுஜய்.
"என்னடா இப்படி இருகாங்க? பார்க்கவே அருவெறுப்பா, அசிங்கமா இருகாங்க. அவங்க என்ன பேசறாங்கன்னே புரியல. அகோரமான சத்தமா இருக்கு." என்றான் பிரதீப்.
"இப்போ என்னடா பண்றது." என்றான் சுஜய்."
"நீ உடம்பு சரியில்லாத மாதுரி நடி, மயக்கம் போட்டு விழுந்திடு. அது கதவை திறந்து உள்ளே வந்தால் பிளான் Bயை பாலோவ் பண்ணுவோம். என்ன ரெடியா?" என்றான் பிரதீப்.
"அம்மா. அது என்ன சத்தம். ஒண்ணுமே புரியலையே." என்று மகன் கேட்கும்பொழுது கூட்டத்தின் முகத்தில் அதிர்ச்சி.
அவர்கள் கூண்டில் இருக்கும் ஒரு ஏலியன் கீழே விழுந்து துடிப்பதை பார்க்கிறார்கள்.
காவலாளி கதவை திறக்கிறான்.
அப்பொழுது கூண்டிற்குள் இருக்கும் பிரதீப் சுஜையை பார்த்து கண்ணடிக்கிறான்.