கண்ணனை மச்சக்காரன் என்று தான் அவனின் கூட்டாளிகள் அழைப்பார்கள். அவனுடைய பெயருக்கு ஏற்றாற்போல் தான் அவனுக்கு வேலை வாய்த்திருக்கிறது என்றும் பல ராதைகளுக்கு நடுவே இருக்கும் கண்ணன் எனவும் பேசிக்கொள்வார்கள். கண்ணனுக்கும் இவர்கள் பேசுவது தெரியும். இருந்தாலும் அவற்றையெல்லாம் அவன் கண்டுகொள்வதில்லை. அவனுடைய வேலையை அவனை விட்டால் வேறு யாரும் நன்றாக செய்யமுடியாது என்று அவனுக்குள் ஒரு இறுமாப்பு. காலை பத்து மணிக்குள் அவனுடைய ராதைகளுக்கு உடைகளை போட்டு முடித்துவிடுவான்.
அவர்களை அழகாக்குவதில் அவனுக்கு அப்படியொரு பேரானந்தம். அவன் என்ன செய்தாலும், என்ன உடை போட்டுவிட்டாலும் அவர்கள் ஏதும் சொல்வதில்லை. அன்றும் அப்படித்தான் கையில் பல வகை புடவை, சுடிதார், சூட் என்று ரக ரகமாக உடுப்புகளை கையில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தான்.
"மோனிகாவுக்கு இன்னைக்கு காஞ்சிபுரம் பட்டு புடவை கட்டிவிடனும்." என்று சொல்லியவன் மனிஷாவை பார்த்தான். பிறகு "உனக்கு தான் போன வாரம் புடவைய கட்டிவிட்டேன்ல. அப்பறம் என்ன உம்முனு இருக்கே? எப்போ பார்த்தாலும் மோனிகா கூட போட்டி போடுறதே உன் வேலை." என்றான்.
அழகான காஞ்சிபுரம் பட்டு புடவையை எடுத்து மோனிகாவிற்கு கட்டிவிட்டான். மோனிகா அவனையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் உதட்டின் மேல் இருக்கும் மச்சம் அவளுடைய முக லட்சணத்தை இன்னும் எடுத்துக்காட்டியது.
"மோனி, இந்த புடவையோட விலை எவ்வளவு தெரியுமா? அஞ்சி லட்சம்! உனக்கு கட்டிவிட்டதும் தான் இந்த புடவையே அழகா இருக்கு." என்றான் கண்ணன். அவனுடைய பேச்சிற்கு ஒன்றுமே சொல்லாமல் புன்னகையை மட்டுமே காட்டினாள் மோனிகா. பிறகு மோனிகாவுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டான் கண்ணன். இவ்வளவையும் மனிஷா பார்த்து பொறாமை படுவதாக நினைத்தான் கண்ணன்.
"உங்க ரெண்டு பேரக்குள்ளயும் ஏன் சண்டை. நான் ரெண்டு பேரோட பிரெண்டும் தான்." என்றான் கண்ணன்.
நாங்களும் இங்கே இருக்கோம் என்று மூவரின் நிழலை கண்டு திரும்பி பார்த்தான். பேபி, சோனி, ஷிம்மியை பார்த்து "உங்களின் பிரெண்டும் தான்." என்று அசடு வழிய சிரித்தான் கண்ணன்.
"பேபிக்கு இன்னைக்கு சூட், சோனிக்கு சுடிதார், ஷம்மிகும் மனிஷாவுக்கும் ஜீன்ஸ், டி ஷர்ட். ஓகே! உங்க ட்ரெஸ்ஸ கழட்டி மாத்திடுறேன்." என்று கண்ணன் நேற்றைய ட்ரெஸ்ஸை கழட்டிவிட்டு புதிய உடுப்பை போட்டுவிட்டான். ஷம்மிக்கு மட்டும் டிரஸ் போடும்போது கண்ணனுக்கு கை நடுங்கும். கண்களை மூடிக்கொண்டே டிரஸ் போட்டுவிடுவான். அவனை அறியாமலேயே உணர்ச்சிகள் அதிகமாகும். அதனால் எப்பொழுதும் ஷம்மிகு மட்டும் கடைசியில் தான் டிரஸ் போட்டுவிடுவான்.
அன்று அவன் ஷம்மிக்கு கொண்டுவந்த டி ஷர்ட் சிறிய அளவாக போய்விட்டது. உள்ளே இருக்கும் அறைக்கு சென்று மாற்று உடை எடுத்துவரவேண்டும். எடுத்துவர திரும்பியவனுக்கு அவனுடைய கூட்டாளிகளின் கண்கள் டி ஷர்ட் இல்லாதபொழுது அவள் மேல் பாயுமே என்று மீண்டும் ஷம்மியிடன் வந்து ஒரு பெரிய டவலை அவள் மேல் போர்த்தினான். போகும் வழியில் முதலாளி கூப்பிடுவதாக கூட்டாளி ஒருவன் சொன்னான்.
"கண்ணா... ஏதோ கொரோனவாம் அதனால ஒரு வாரம் கடைய அடைக்கபோறேன். எல்லார்கிட்டயும் சொல்லிடு. ஒரு மணி நேரத்துல எல்லாருக்கும் கிளம்பனும்" என்று ஜவுளி கடைக்கார முதலாளி சொன்னார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. பஸ் கிடைத்து அவர் அவர்கள் ஊருக்கு செல்லவேண்டும் என்று எல்லோருக்குள்ளும் ஒரு கவலை. ஆனால் கண்ணனுக்கு அவனுடைய ராதைகளை தனியே விட்டுவிட்டு செல்லவேண்டுமே என்று வருத்தம்.
அந்த கடையில் வேலை பார்க்கும் அனைவரும் கிளம்பிவிட்டார்கள். கண்ணனுக்கு ஊரில் யாரும் இல்லை. எங்கே போவது என்று விழித்துக்கொண்டிருந்தான். மூன்று மணிநேரமாக அங்கும் இங்கும்
சுற்றிக்கொண்டிருந்தான். சரி பஸ் ஏறி ஊருக்கு போவோம். இவர்கள் வீட்டில் ஒரு வாரம், அவர்கள் வீட்டில் ஒரு வாரம் என்று தாங்கிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து பஸ்ஸில் ஏறினான். அவனுடைய மொபைல் போன் அடித்தது. முதலாளியின் அழைப்பு தான் அது.
"சொல்லுங்க முதலாளி." என்றான் கண்ணன்.
"கண்ணா. பஸ் ஏறிடியா?" என்றார் முதலாளி.
"இல்லையா. இப்போதான் ஏறப்போறேன்." என்றான் கண்ணன்.
"நல்லவேளை. சீக்கிரம் கடைக்கு வா. பக்கத்துக்கு கடைல யாரோ கன்னக்கோல் வைக்க முயற்சி செஞ்சிருக்கான் களவாணி பய. நீ கடலையே ஒரு வாரம் தங்கிடு. ஜமானெல்லாம் பத்திரமா இருக்கும்ல." என்றார். இதைக்கேட்டு கண்ணனுக்கு ஒரே சந்தோஷம். முதலாளி கடையின் பின்பக்க சாவியையும், பணமும் குடுத்துவிட்டு சென்றார்.
கண்ணன் கடைக்குள் சென்று ஒரு சிறிய மின்விளக்கை போட்டான். அந்த அடர்ந்த இருளில் சிறு வெளிச்சத்தில் அந்த ஜவுளிக்கடை பொம்மைகள் ஜொலித்தது. அப்பொழுது தான் அவன் ஷம்மி மேல் அணிவித்த டவலை பார்த்தான். அவனுடைய உடல் வேர்க்க, கைகள் நடுங்க அந்த டவலை எடுத்தான். அவன் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.