மூன்று வகையான திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
முதல் வகை 'ப்ரோடிஜி' (Prodigy) என்கிற அதிமேதாவி. இவர்கள் இயற்கையிலேயே அதிகமான உள்வாங்கும் திறன் கொண்டவர்கள். ஆசிரியரோ, குருவோ இவர்களுக்கு தேவை இல்லை. ஆசிரியர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நேரிடும். பார்த்த, கேட்ட மாத்திரத்திலேயே இவர்களால் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அதிசயிக்கத்தக்க வகையில் வெளிக்கொணர்வர்கள். இவர்கள் பெரும் பெயர், புகழ், பதவிகளோடு குறுகிய காலத்தில் முன்னேறுவர்.இரண்டாம் வகை 'இன்டெலிஜெண்ட்' (Intelligent) என்னும் புத்திசாலி. இவர்களுக்குள் ஐம்பது சதவிகித ப்ரோடிஜி இருக்கிறார்கள். இவர்களுக்கு கிரியா ஊக்கி தேவை. ஆசிரியரோ, குருவோ, நண்பர்களோ இவர்களுக்கு தூண்டுகோலாக அமையலாம். சில நேரங்களில் சோர்வடைந்தாலும் ஒரு உந்துதல் சக்தி இவர்களின் மனதிற்குள் வந்துவிட்டால் இவர்களைப்போல் படைக்க ஆளில்லை. ப்ரோடிஜி என்பவர்களுக்கு காட்சி திறன் அதிகம் என்றால் இவர்களுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் அதிகம். முதல் இரு வகையான திரை எழுத்தாளர்கள் சேர்ந்து செயல்படும்பொழுது பெரிய சாதனைகள் நடக்கும்.
மூன்றாம் வகை நபர்கள் 'கியூரியாசிட்டி' (Curiosity) என்கிற ஆர்வம் மிகுதியானவர்கள். இவர்களால் ஒரு ஆசிரியரையோ, குருவையோ பின்தொடர முடியாது. தானாகவும் கற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கென்று ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொள்வார்கள். முதல் இரு வகையான படைப்பாளியின் மேல் புகார் கூறுவார். அவர்கள் படைப்பதெல்லாம் படைப்பே இல்லை என்று வாதிடுவர். இவர்களால் தானாகவும் செயல் பட முடியாது. பிறரோடு சேர்ந்தும் செயல் பட முடியாது. இவர்கள் உணர்வு திறன் அதிகமாக இருக்க கூடியவர்கள். தன்னுடைய நேரத்தையும், பிறருடைய நேரத்தையும் வீராப்பு பேசி வீணாக்க கூடியவர்கள்.
பள்ளியில் முதல் பத்து இடத்தில வருபவர்களுக்கு டியூஷன் தேவைப்படாது. ஏனென்றால் அவர்களின் உள்வாங்கும் திறன் அதிகம். பத்தில் இருந்து பதினைந்துக்குள் வருபவர்களுக்கு ஆசிரியரின் ஊக்கம் சற்று இருந்து சில நேரங்களில் பள்ளி நேரம் முடிந்தும் சொல்லித்தரவேண்டியிருக்கும். பதினைந்திற்கு மேல் வாங்குபவர்களுக்கும் கல்வி என்பது உரிமையே! எனக்கு யாரும் சொல்லித்தராமல் வருகிறது அதனால் படிப்பு என்பது இயற்கையாக வரவேண்டும் டியூஷன் எல்லாம் போய் படிக்கத்தேவை இல்லை. வகுப்பிலே ஆசிரியர் சொல்வதை கேட்டாலே போதும் என்று சொல்வது இறுமாப்பில் வெளிப்பாடாகும்.
திரைத்துறைக்கும் இந்த சூத்திரம் பொருந்தும். இயற்கையாகவே கதை திரைக்கதை எழுதும் திறன் எல்லோருக்கும் வருவதில்லை. ஆர்வம் இருப்பவர்களுக்கு எல்லாம் இயற்கையாகவே திறன் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. அதிமேதாவிகள் எந்த துணையும் இன்றி குறும்படம் எடுத்து பலரிடம் காட்டி வாய்ப்பை பெறமுடியும். ஆனால் பலருக்கு அந்த வாய்ப்பு இங்கே இல்லை. யாரிடமாவது உதவியாளராகவோ அல்லது இதற்காக இருக்கிற படிப்பை படிப்பதன் மூலமோ அவர்களுக்கு இந்த திறன் வரலாம். திரைத்துறையில் பலர் இவ்விஷயங்களை ஏளனமாக பார்கிறார்கள். நூறில் ஒருவருக்கு மட்டுமே சூத்திரங்கள் தாமாக வந்து விழும். மற்றவர்களுக்கு ஆட்டவணைகளும், பலரின் அரைச்சி முடிவுகளுமே வழிகாட்டியாக இருக்கிறது. சூத்திரங்கள், வழிகாட்டுதல்கள் இன்றி படம் எடுத்தால் தான் அது படைப்பு என்று சொல்வது தலைக்கனத்தின் உச்சம்.