புதிய கரு (Idea) எங்கிருந்து வருகிறது? Formula for Out of the box thinking

உலகில் உள்ள எல்லா கதைகளும் சொல்லியாகிவிட்டதா?

அப்படியென்றால் புதிய கருவை (Idea) எங்கிருந்து தேடுவது?

போட்டி நிறைந்த இந்த உலகில் எப்படி புதிய சிந்தனைகளை (Out of the Box Thinking) கொடுத்து மக்களை எப்படி கவர்வது?

ஒரு தயாரிப்பாளர் வாரத்திற்கு முப்பது கதைச்சுருக்கங்கள் (Story Synopsis) இயக்குனர்கள் தனக்கு அனுப்புவதாக சொல்கிறார். அப்படி என்றல் வருடத்திற்கு ஆயிரத்தி ஐநூறு கதை சுருக்கங்களை அவரோ அவரின் குழுவோ படிக்க நேருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு மாற்று சிந்தனை உள்ள நூற்றி ஐம்பது கதைகள் கூடவா கிடைக்கவில்லை? இது வெறும் பத்து சதவிகிதம் தான். ஆனால் அந்த கதைகளில் இருந்து அவர்கள் வெறும் ஐந்தை மட்டுமே படமாக்குகிறார்கள். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது இரண்டே விஷயங்கள் தான். 

ஒன்று - எல்லா எழுத்தாளர்களும் ஒரே சிந்தனை திறனில் தான் சிந்திக்கிறார்கள். கதையை மாற்று சிந்தனையில் சிந்தித்து கருவை உருவாக்குவதில்லை.

இரண்டு - எந்த வித சிந்தனையாக இருந்தாலும் அதை சரியான விதத்தில் கதைச்சுருக்கமாக எழுதமுடியவில்லை. சிந்தனையை எழுத்து வடிவில் கொண்டுவருவது தான் ஒரு எழுத்தாளரின் முதல் சாதனை / சோதனை.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் வீடியோக்களும், கதைகளும், கருத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. யூ டியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என்று புதியவர்களால் மாற்று சிந்தனை உள்ள விஷயங்களை மக்களுக்கு கொடுத்து பணமும், புகழும் பெறுகின்றனர். இந்த சூழலில் எழுத்தாளர்களுக்கு சிந்தனை தடை வருவது வழக்கம். நல்ல கருவாகவோ சிந்தனையாகவோ இருக்கும். ஆனால் அதை கதைச்சுருக்க வடிவில் எழுதும்பொழுது எழுத்தாளர்களுக்கு சிந்தனை தடை (Writer's Block) ஏற்படும். 

நான் பயன்படுத்தும் ஒரு சூத்திரத்தை உங்களுக்கு தருகிறேன். உபயோகமாகும் என்று நினைத்தால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நமக்குள் வரும் ஒவ்வொரு எண்ணத்தையும் பகுப்பாய்ந்த பிறகு வரும் யோசனையை பல சிந்தனைத்திறன்களால் செதுக்குங்கள். அதிலிருந்து வரும் யோசனையை பல கோணங்களில் பாருங்கள். நீங்களே எதிர்பார்க்காத புதிய சிந்தனையை, கருவை, கருத்தை உங்களால் தர இயலும்.