பிறந்தநாள் பரிசு - சாய் விஜேந்திரனின் சிறுகதை

 சதீஷுக்கு இன்று பிறந்தநாள். ஆனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான். யாரிடமும் சொல்லாமல் அவனுடைய அலுவலகத்தில் இருந்து கிளம்பி மெரீனா பீச்சிற்கு வந்துவிட்டான். மாலை ஐந்து மணி இருக்கும். கூட்டம் பீச்சிற்குள் வந்துகொண்டிருந்தது. யாருமே இல்லாத இடமாக பார்த்து அங்கே சென்று உட்கார்ந்தான். இன்று இப்படி நடந்திருக்கக்கூடாது. ஒரு தவறும் செய்யாமல் மேலாளரிடம் திட்டு வாங்கியதை எண்ணி சதீஷ் வருத்தப்பட்டான். நான் அந்த தப்பு செய்திருப்பேனா என்று கூட யோசிக்காமல் எல்லோருக்கும் முன்பாக கத்தியது அவனுக்கு அவமானமாக இருந்தது. நாளை அலுவலகத்திற்கு சென்று முதல் வேலையாக ராஜினாமா செய்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தான். கோவம் அவன் கண்ணை மறைத்தது.

அரை மணிநேரம் கடந்திருக்கும். இன்னும் கோவம் குறையாமல் உள்ளுக்குளேயே கர்ஜித்துக்கொண்டிருந்தான் சதீஷ். அதே நேரத்தில் இருபது வயது இளம் பெண் ஒருத்தி அழுதுகொண்டே மணலில் நடந்துவருவதை பார்த்தான். சதீஷ் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் ஓர் இடத்தில் சட்டென்று உட்கார்ந்தாள். அவளின் அழகு சதீஷின் இறுக்கமான மனதில் கல் எரிந்தாற்போல் இருந்தது. அவள் யாருக்கோ போன் செய்து பார்க்கிறாள். மணி அடித்துக்கொண்டே இருக்கிறது ஆனால் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள்.

"எடுடா சனியனே!" என்று யாரையோ திட்டினாள். சற்று தொலைவில் மொபைல் போன் அடிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தாள். இருபத்தி ஐந்து வயது இருக்கும் ஒரு இளைஞன் அவளை நோக்கி கை அசைத்தான்.

அவன் அருகில் வந்ததும் "எவ்ளோ நேரமா ட்ரை பண்றேன். போன் அடிச்சா எடுக்கமாட்டியா?" என்று அந்த பெண் இளைஞனை நோக்கி கத்தினாள்.

"டிரைவ் பண்ணிட்டு இருந்தேனம்மா. சொல்லு என்ன விஷயம்?" என்றான் இளைஞன். அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மேல் விழுந்து அந்த பெண் அழத்தொடங்கினாள்.

இவ்வளவு நேரமாக கோவத்திலும் மன இருக்கத்திலும் இருந்த சதீஷிற்கு இந்த நிகழ்வை பார்த்ததும் அவனுடைய கவலை பறந்துவிட்டது. பீர்பால் கொடு போல் அவனுடைய நிலைமை இருந்தது. 

"அப்பா கிட்ட நீ சொன்ன மாதிரி பேசினேன். ஆனால் கல்யாணத்துக்கு அவரு ஒதுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்." என்று சொல்லி மீண்டும் விக்கி விக்கி அழத்தொடங்கினாள் அந்த பெண்.

ஓ! காதல் விவகாரமா? என்று சதீஷ் நினைத்தான்.

"சரி மேகா. இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை. நான் ஒரு தடவ பேசிப்பாக்குறேன்." என்றான் அந்த இளைஞன்.

"வேண்டாம். என் தலையெழுத்து இப்படித்தாண்ணா என்ன பண்றது. நீ பேசி அசிங்கப்படாதே ஆனந்த்!" என்றாள் மேகா.

"அவர் என்னை என்ன பண்ணிடுவாரு. பெத்தவங்க சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்கும்னு நெனச்சேன். ஓடி போய் கல்யாணம் பணிக்க வேணாம்னு நான் நெனச்சது தப்பு தான். இப்போ சொல்லு எந்த கோவில்? எந்த ரெஜிஸ்டர் ஆபீஸ்?" என்றான் ஆனந்த்.

"டேய். என்னடா. நீயா ஓடி போறத பத்தி பேசுறே!" என்றாள் மேகா.

சதீஷிற்கு அவனுடைய பிரச்சனையை மறந்து அந்த காதல் கதையின் சுவாரஸ்யத்திற்குள் போய்விட்டான். 

"அவர் தூங்கும்போது நான் தலைகாணியை வச்சி அமுக்கிடறேன் பாரு". என்றான் ஆனந்த். மேகா அதிர்ச்சியில் அவனை பார்த்தாள். அவன் அப்படியெல்லாம் செய்யமாட்டான் என்று அவளுக்கும் தெரியும். 

சுண்டல் விற்பவன், பூக்காரி, குதிரை சவாரி என்று இவர்களின் பேச்சுக்கு நடு நடுவே நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. அவற்றை எல்லாம் இந்த மூன்று பெரும் பொருட்படுத்தவில்லை.

"எனக்கு என்னமோ இந்த கல்யாணம் நடக்கும்னு தோணல. கடைசி வரைக்கும் இப்படியே இருந்திடறேன்" என்றாள் மேகா.

"ஐயோ! அப்போ என்னோட கதி? எனக்கு கட்டாயம் கல்யாணம் வேணும்ப்பா" என்றான் ஆனந்த்.

"நான் இவ்ளோ சோகமா இருக்கேனேனு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? கல் நெஞ்சக்கரா. நான் ஏதோ சும்மா சொன்னா உடனே கன்னியா வாழ்க்கை புல்லா வீட்டுலையே உட்கார வச்சிடுவே போலருக்கே!. ஒரு பேச்சுக்காவது அப்படிலாம் சொல்லாத மேகானு சொல்றியா பாரு:\" என்று கோவத்தை ஆனந்த் மேல் காட்டினாள் மேகா.

"கண்ணகி சிலைக்கு பக்கத்துல இடம் இருக்கு மேகா. அங்க காதலுக்காக காத்திருந்த கன்னின்னு உனக்கு ஒரு சிலை வச்சிடலாம்" என்று சிரித்தான் ஆனந்த்.

"ஓஹோ! நான் கன்னியா சிலையா இருக்கனும். இவரு மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள குட்டிகளோடு சந்தோஷமா இருப்பாரு. எனக்கு கல்யாணம் இல்லேன்னா உனக்கும் இல்லை தெரிஞ்சிக்கோ" என்று கறாராக மேகா சொன்னாள்.

அடடா இந்த பேச்சு ரொம்ப சுவரசயமா இருக்கே. காதலர்களின் ஊடல் கேள்வி பட்டிருக்கிறேன். இப்போ தான் நேர்ல பாக்குறேன்னு மனதில் நினைத்தான் சதீஷ்.

"நான், என்னோட பொண்டாட்டி புள்ளயோட வந்து வருஷா வருஷம் மாலையெல்லாம் போடுறேன்மா. வேணா படையல் வச்சி பொங்க வச்சிடுறோம்" என்று எறியும் தீயில் எண்ணையை ஊற்றியவனாக பேசினான் ஆனந்த். இதைக்கேட்டு மேகாவிற்கு கண்களில் இருந்து தண்ணீர் வந்தது. அவளால் அடக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் ஜோதிடம், கை ரேகை பார்க்கும் நடு வயது பெண்மணி ஒருவர் வந்தார்.

"சாமி. ஜோசியம், கை ரேகை சாமி" என்று சதீஷை பார்த்து சொன்னார். சதீஷும் வேண்டாம் என்று தலை அசைத்தான்.

"இன்னைக்கு ஒன்னும் போனி ஆகல சாமி. ஐயாவோட கைய பாத்து குறி சொல்றேன். இருபது ரூபா தந்தா போதும் சாமி" என்றார் அந்த பெண்மணி. அதற்கும் வேண்டாம் என்று தலையை ஆட்டினான் சதீஷ்.

"உன்னோட மனக்குறை இப்பவே தீந்துடும் சாமி. நீ செய்யாத தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்பாங்க. அப்போ என்னை பார்த்தா காசு குடு சாமி" என்று சொல்லிவிட்டு சதீஷின் பதிலுக்காக காத்திருக்காமல் அந்த இடத்தை விட்டு மேகாவை நோக்கி நடந்தார் அந்த பெண்மணி.

சதீஷிற்கு அந்த பெண்மணியின் வார்த்தைகளால் ஆச்சர்யம். இவருக்கு எப்படி அவனுடைய சூழ்நிலை தெரியும் என்று நினைத்தான். அதே நேரத்தில் மேகாவும் கை ரேகை பார்க்கவேண்டாம் என்றாள். ஆனால் ஆனந்த் வலுக்கட்டாயமாக அவளின் கையை அந்த பெண்மணியிடம் நீட்டினான். 

"என்னோட தாயி பரமேஸ்வரி சொல்லுறா நல்லா கேளு. உன்னோட மனசுல இருக்குற ஒரு விஷயம் கஷ்டப்பட்டு தான் நடக்கும். உனக்கு வரக்கூடிய மாப்பிளை மேற்கு தெசையிலேந்து வருவான். அழகு, உயரம், கம்பீரம்னு உனக்கு ஏத்தவனா இருப்பான்." என்று அந்த பெண்மணி சொல்லும்பொழுது சதீஷ் ஆனந்தை பார்த்தான். இவனா அழகு, உயரம், கம்பீரம்? என்று மனதிற்குள் நினைத்தான். பின்பு அந்த பெண்மணி தொடர்ந்தாள் "அழகுன்னா என்னோட அப்பன் முருகன் தான். அவரோட பேரு இருக்கறவரு தான் உன்னோட புருஷன்" என்றார். 

அப்படி சொல்லி முடித்தவுடன் கண்களில் நீரோடு இருந்த மேகா அதை துடைத்துக்கொண்டு சரியாக உட்கார்ந்தாள். இப்பொழுது அவளுடைய முகத்தில் சிரிப்பும் இருந்தது. மேலே இன்னும் சொல்லுங்கள் என்பது போல அவளின் கண்கள் அந்த பெண்மணியை பார்த்தது. முருகனுக்கு ஆனந்துன்னு ஒரு பேரு இருக்கா என்று சதீஷ் யோசித்தான். 

ஆனந்த் மேகாவை மேற்கு திசையை பார்க்கச்சொன்னான். அப்பொழுது ஒரு இளைஞன் வருவதை பார்த்து இருவரும் சிரித்தார்கள். அந்த இளைஞனை கை காட்டி அழைத்தான் ஆனந்த். அவன் அருகே வந்ததும்

"இங்கதான் இருக்கீங்களா. நல்ல வேலை உள்ள போய் தேடணும்னு நெனச்சேன்" என்றான் அந்த இளைஞன்.

"இல்ல மாப்ளே!  தங்கச்சி அழுதுட்டு இருந்துது அதான் இங்கேயே உட்கார்ந்துட்டோம்" என்று கந்தனை அந்த பெண்மணியின் அருகில் உட்காரச்சொன்னான் ஆனந்த்.

"அடச்சே! தங்கச்சியா?" என்று தான் எமர்ந்ததை நினைத்து மனதிற்குள் சிரித்தான் சதீஷ். அப்பொழுது அவனுடைய மொபைல் போனில் அவனுடைய மேலாளரின் அழைப்பை அவன் பார்த்தான். அந்த பெண்மணி சொன்னது எவ்வளவு சரியாக போச்சு என்று அந்த போனை எடுத்தான்.

"ஹேப்பி பர்த்டே சதீஷ். உன்ன எப்படி பிராங்க் பண்ணோம் பாத்தியா? இதான் உனக்கு எங்களோட பிறந்தநாள் பரிசு" என்று அவனுடன் வேலை பார்க்கும் எல்லோருமே போனில் கத்தினார்கள். இப்படி பிறந்த நாள் அன்று இருமுறை முட்டாள் ஆகிவிட்டோமே என்று நினைத்து அந்த பெண்மணியின் கையில் நூறு ரூபாய்யை கொடுத்துவிட்டு அலுவலகம் நோக்கி கிளம்பினான் சதீஷ்.