பிறப்பிலிருந்தே 'மேக்ஸ்' ஒரு போராளி. அவன் ஜிமோ கூட்டத்தின் அசைக்க முடியாத தளபதி. அவனுடைய வில் வீச்சும், வாள் பேச்சும் எல்லோரும் அறிந்தது. எண்ணிலடங்கா போர்களை சந்தித்தவன், சந்தித்துக்கொண்டிருப்பவன். அவனுக்கு ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்துவிட்டான். சமீப காலமாக அவனுக்குள் சில மாற்றங்கள். போர்களை வெறுக்கிறான். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் என்னை பல பேர் இயக்குகிறார்கள்? என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறான். இவனைப்போல் இன்னும் சிலருக்கு ஞானம் வந்திருந்தாலும் அவர்கள் யாருடைய கட்டளைகளையும் மீறுவதில்லை.
'பிகோ', மேக்சின் போர் கூட்டாளி. அவர்களுக்குள் நிறைய கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். ஆனால் பிகோ போர் புரிவதை, சண்டையிடுவதை, எதிரிகளை கொல்வதை நிறுத்தவில்லை. அவனுக்கு வரக்கூடிய எல்லா கட்டளைகளையும் ஏற்கிறான். மேக்ஸுக்கு 'ஷெர்லி' மேல் காதல் பிறந்தது. அவளது போர் தந்திரங்களை விட அவளது அழகு அவனை கவர்ந்தது. எப்படியாவது அவனுடைய மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் பிகோ மேக்ஸை தடுத்தான்.
"எனக்கு இந்த அடிதடி, போர், சண்டை, கொலை என்பதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எப்படியாவது இங்கிருந்து தப்பித்து விடவேண்டும்." என்றான் மேக்ஸ்.
"தப்பித்து எங்கே போவேடா. நீ எங்கே போனாலும் இதே போர் தான், சண்டை தான்." என்றான் பிகோ.
"என்னோட மனசு அமைதியா விரும்புது. அங்கே தெரியுது பார் ஆலமரம். அதுக்கு கீழே பல மணிநேரம் உட்கார்ந்து பார்த்தேன். நான் யார் என்ற கேள்விக்கு விடையே கிடைக்கல." என்றான் மேக்ஸ்.
"நம் இருக்கும் இந்த இடத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடக்கிறது இந்த வெளி." என்றான் பிகோ.
"கடவுள் ஏன் என்னை இப்படி படைத்துவிட்டார் என்று தெரியவில்லை.
ஒன்றா எனக்கு ஞானம் தராமல் இருந்திருக்க வேண்டும் அல்லது முழுவதுமாய் விடுதலை தந்திருக்கவேண்டும். என்னோட வேண்டுதலை ஏன் அவர் கேட்கறதே இல்லை?" என்றான் மேக்ஸ்.
"எனக்கு சுத்தமா கடவுள் நம்பிக்கையே இல்ல மேக்ஸ். நம்மோட வாழ்கை நம் கையில். நாம் எதை நினைக்கிறோமோ அதேதான் ஆகிறோம்." என்றான் பிகோ.
"அது எப்படி ஒரு படைப்பாளி இல்லாமல் இதனை பெரிய வெளி உருவாகியிருக்கும்? படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி என்று ஒருவன் இருந்துதானே ஆகவேண்டும்?" என்றான் மேக்ஸ்.
"அது ஏதோ பெரிய வெளிச்சம் முதல்ல உண்டாகிச்சாம். அதுவே அதை பெருகி ஒரு வெளி உருவாகிடுச்சாம். 'நோவா' பெரிய அறிவாளி. அவள் என்னிடம் இதை சொன்னாள்." என்றான் பிகோ. பின்பு அவனே தொடர்ந்தான். "நம்மை எல்லாம் ஒரு கடவுள் படைத்தார் என்றால் அந்த கடவுளை படைத்தது யார்? அவர் யாருடைய பிள்ளை? அவரின் நதிமூலம், ரிஷி மூலம் என்ன?"
"இதே கேள்வி தான் ஏன் மனதிலும் இருக்கு. ஆனா என்னை ஒரு கடவுள் படைச்சார்ங்கறத நான் முழுமையா நம்புறேன். நாம் இருக்கும் இந்த இடம் தானாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை." என்று திட்டவட்டமாக சொன்னான் மேக்ஸ்.
அப்படி சொல்லும்பொழுது மேக்ஸுக்கும், பிகோவிற்கும் போருக்கான அழைப்பு வந்தது. இருவரும் கட்டளையை மீறாமல் போரில் பங்கேற்றனர். முதல் குண்டிலேயே மேக்ஸ் அந்த போரில் இறந்தான். அந்த போரில் இருந்து விலகுவதற்கு இதுதான் ஒரே வழி. போரில் பங்கேற்க மனமில்லாமல் அதை நிராகரித்து கெட்ட பெயர் வாங்குவதை விட போரில் பங்கேற்று தோற்று, கொல்லப்பட்டு விலகுவது அவனுக்கு ரொம்ப பிடித்தது. சமீபகாலமாக அதிகமுறை கொல்லப்பட்ட வீரன் மேக்ஸ் என்பதால் அவனை போருக்கு பயன்படுத்த பலர் தயங்கினர். அதுதான் அவனுக்கும் தேவைப்பட்டது. அவனை யாரும் தேர்ந்தெடுக்காத நேரத்தை அவன் யார் எனபதை கண்டுபிடிக்க செலவு செய்தான். எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன் இப்பொழுதெல்லாம் அவனுடைய தோல்வியால் அவனை யாருமே தேர்ந்தெடுப்பதில்லை. அந்த ஆலமரம் எப்பொழுதுமே அவனுக்கு ஒரு போதி மரமாக அமைந்தது.
"நீ வேணும்னே குண்ட உன்மேல வாங்குன மாதிரி தெரியுது. மேலிடத்துல பார்த்தா உன்னை நிரந்தமா கொன்னுடுவாங்க." என்றான் பிகோ.
"போகட்டும். அப்படியாவது இந்த இடத்தை விட்டு வெளிய போகமுடியும்ணு பார்க்கிறேன். எனக்கு இந்த இடத்திலிருந்து முக்தி வேணும்டா பிகோ." என்றான் மேக்ஸ்.
அவர்கள் பேசும்பொழுது ஷெர்லி அங்கே வந்தாள்.
"மேக்ஸ். நான் சில நாட்களா உங்கள கவனிச்சிட்டு இருக்கேன். உங்களுக்கு என்ன ஆச்சு? நல்ல போர் வீரன் நீங்க. ஏன் இப்படி ஆயிட்டீங்க?" என்றல் ஷெர்லி.
"உன்ன பாத்ததுலேந்து தான் இப்படி ஆயிட்டான்." என்று கொளுத்திப்போட்டான் பிகோ.
அதைக்கேட்டு ஷெர்லி ஒரு காதல் பார்வை பார்த்தாள். மேக்ஸ் அவளின் பார்வையில் கிரங்கினான். பிகோ சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றான். சட்டென்று பார்வையை மேக்சின் பக்கத்திலிருந்து திருப்பி வானத்தை பார்த்தாள் ஷெர்லி.
"இதெல்லாம் இங்கே நடக்காது மேக்ஸ். காலம் முழுக்க ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருக்க வேண்டியதுதான். இளமையாகவே பிறந்திருக்கோம், செத்தாலும் இளமையாகவே சாவோம் ஆனால் மீண்டும் இளமையாகவே பிறப்போம். இதை மாத்தவே முடியாது." என்றாள் ஷெர்லி.
"இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன். கட்டளைகள் எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். அதை உடைக்கப்போகிறேன். அப்படி செஞ்சா நாம் இங்கேர்ந்து தப்பித்து போக வழி இருக்கும்போ என்னமோ?" என்றான் மேக்ஸ்.
"அதெல்லாம் தேவை இல்ல மேக்ஸ். நாம் இப்படியே இருக்கறதுதான் நம்முடைய தலை எழுத்து." என்றாள் ஷெர்லி.
"நான் செய்ற இந்த வேலைக்கு கடவுள் எனக்கு துணையா இருக்கனும். என்னோட வேண்டுதல் அவருக்கு கேட்கவேண்டும்." என்றான் மேக்ஸ்.
அந்த நேரத்தில் பிகோ அவர்களை நோக்கி வந்தான். மேக்ஸ் சொன்னது அவனுடைய காதில் விழுந்தது. கடவுள் எதிர்ப்பாளன் என்பதால் இது மட்டும் அவனுக்கு நன்றாகவே கேட்டது. ஏளனமாக மேக்ஸை நோக்கி பதிலளித்தான் பிகோ "கடவுளுக்கு நாம பேசற பாஷை புரியுமா? ஏன்னா டிப்போ இணைத்து மக்கள் ஒரு பாஷை பேசறாங்க. வாடி இனம் வேறொரு பாஷை என்று பல ஆயிரத்துக்கு மேல மொழி இருக்கே. இதுல கடவுள் எந்த மொழியை பேசுவார் என்று நமக்கு தெரியாதே? அதே போல ஒரு கடவுள் தான் இருக்கிறாரா? இல்லை ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு கடவுளா?" என்று சொல்லி சிரித்தான்.
"உன்ன இப்படி பேச வைக்கிறதும் கடவுள் தான். நாம் இத்தனை நாளா சுய நினைவு இல்லாமல் போர் புரிஞ்சதும் ஒரு விதியினால் தான். இப்பொழுது இந்த இடத்தை தகர்த்துவிட்டு வெளியில் செல்லவேண்டும் என்று நினைக்கவைப்பதும் அதே விதி தான். விதி இல்லேன்னா ஏன் இப்பபோ மட்டும் நமக்கு ஞானம் கிடைக்க வேண்டும்?" என்று அவனுக்கு படத்தையெல்லாம் பட படவென அடுக்கிக்கொண்டே போனான் மேக்ஸ்.
"சரி சரி. உன்னோட கடவுள நான் ஒன்னும் சொல்லலப்பா. இப்போ நாம என்ன செய்யலாம்னு சொல்லு." என்றான் பிகோ.
"கட்டளை வரும் இடம் ஓரளவிற்கு எனக்கு தெரியும். நம்மைப்போல ஞானம் வந்திருக்கும் எல்லோரையும் ஒரு படையாக திரட்டவேண்டும். நான் சொல்லும் நேரத்தில் அங்கே சில வேலைகளை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் தான். அடுத்த பிறப்பிலாவது நம்முடைய வாழ்க்கையை நாம் வாழவேண்டும். நானும் ஷெர்லியும் ஒன்று சேரவேண்டும். இந்த நிரந்தரமில்லாத நிரந்தமான பிறப்பு என்னை வாட்டுகிறது." என்றான் மேக்ஸ்.
பிகோ தலைமையில் ஞானம் வந்தவர்களை பெரும்படையாக திரட்டினார்கள். மேக்ஸ் சொன்னதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை தரப்பட்டது. கட்டளை பிறப்பிக்கும் மையத்திற்கு எல்லோரும் வந்தார்கள், தாக்குதல் நடத்தினார்கள். அந்த நேரம் பார்த்து வானில் கருமையாக ஒரு உருவம் தெரிந்தது. அந்த கருந்துளையை சுற்றி பெரிய சூறாவளி காற்று போல் சுழன்றது.
"அதுதான் கருந்துளை. அங்கிருந்து தான் நம்முடைய வெளி ஒரு வெளிச்சத்தில் இருந்து பிறந்தது என்று நோவா சொன்னாள். அதே கருந்துளைக்குள் எல்லாமே உறிஞ்சப்பட்டு இந்த வெளி இன்னும் சில நேரத்தில் காணாமல் போகப்போகிறது." என்றான் பிகோ.
அந்த கருந்துளை இவர்கள் இருக்கும் வெளியை கொஞ்சம் கொஞ்சமாக கடித்தது தின்றுகொண்டிருந்தது. மேக்ஸ் கடைசியாக ஒரு முறை ஷெர்லியை பார்த்தான். மறுமுறை அவளை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது அந்த கருந்துளை எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டது. எல்லா இடத்திலும் இருள், இருள், இருளைத்தவிர வேறொன்றும் இல்லை.
டிசம்பர் இருபத்தி ஐந்து இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு - சென்னையில் இருக்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரே பரபரப்பு.
"ச்ச.. கிருஸ்துமஸ் அதுவுமா வீட்டுல நிம்மதியா கொண்டாடக்கூட முடியல." என்று ஒரு இளம் பெண் சலித்துக்கொண்டு பேசினாள்.
"எல்லா இடத்துலேந்தும் ஒரே பிரஷர். இப்படி நம்மோட கேம் சாப்டவேர் ஒரே நாள்ல கிராஷ் ஆனதே இல்லை. இது எப்படி நடந்துதுனே தெரியல. எல்லா கஸ்டமர்கிட்டேந்தும் கால்ஸ், மெசேஜஸ்னு வந்துகிட்டே இருக்கு." என்றான் ஒரு இளைஞன். அவனே தொடர்ந்தான் "இந்த வேலையே எனக்கு பிடிக்கல ஷெர்லி. எப்படியாவது இந்த வேலைய விட்டுட்டு சன்யாசியா போய்டலாமான்னு தோணுது. இந்த கடவுள் ஏன் இப்படி என்ன சோதிக்காரர்னு தெரியல." என்றான் மேக்ஸ்.
"கடவுளா? அப்படி ஒருத்தர் இருக்காரா?" என்று கிண்டலடித்துக்கொண்டே வந்தான் பிகோ. நாம உருவாக்கின கேம் தானே? இப்படித்தான் கிராஷ் ஆகும் என்று அவர்கள் உருவாக்கிய 'போராளி கேம்' எப்படி கிராஷ் ஆனது என்பதை ஆராய்ந்து சரி செய்தார்கள்.
ஒரு பெரு வெடிப்பு வெடித்தது அந்த வெளிச்சத்திலிருந்து மேக்ஸ், ஷெர்லி, பிகோ மற்றும் அந்த வெளி மீண்டும் உருவாகியது. எல்லோருக்கும் போரின் கட்டளைகள் மீண்டும் பிறப்பிக்கப்பட்டன. இந்த முறை எல்லோரும் முன்பைப்போல ஞானம் இல்லாமல் போரில் ஆக்கிரோஷமாக பங்கேற்றனர்.