ஐந்து கோடி ரூபாய்க்கு கீழே முற்றிலும் புதியவர்களால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு தமிழ் திரைப்படங்களாக இருந்தாலும் (நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் போன்றவை) 2022ஆம் ஆண்டில் வெற்றி பெறவில்லை. ஐந்து கோடி என்று ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். ஆனால் நிறைய திரைப்படங்கள் ஒன்று முதல் இரண்டு கோடிக்குள் புதியவர்களால் எடுக்கப்படுகிறது. இவை எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியான கதையோ, திரைக்கதை வடிவமைப்போ, இசையோ, நடிப்போ, வசனமோ இல்லை. விளம்பரம் கூட சரியாக செய்யப்படவில்லை. நிகழ் காலத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் சூத்திரத்தின் ரகசியம் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படத்தின் தரத்தில் உள்ளது. புரிந்தவர்கள் புரிந்துகொண்டால், பணத்தையாவது காப்பாற்றலாம்.
இந்த ஆண்டு திரைப்படம் எடுக்க நினைக்கும் புதியவர்கள் பிரதீப் ரங்கநாதனை மனதில் வைத்துக்கொண்டு திரைப்படம் எடுக்கவேண்டாம். அவர் ஏற்கனவே இயக்குனராக வெற்றி கொடுத்தவர். அவருடைய தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் பிரபலமானவர்களே! அவர்களை புதியவர்கள் என்று மனக்கோட்டை கட்டி மக்கள் புதியவர்களின் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பணத்தை இழக்காதீர்கள்.
கே ஜி எப், காந்தாரா எல்லாம் நமக்கு புதியவர்கள் தானே என்று நீங்கள் மனக்கணக்கு போடலாம். ஆனால் அந்த திரைப்படத்தின் இசை, ஒலி / ஒளி அமைப்பு, படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்ச்சிகளுக்கும் அவர்கள் செய்த செலவு, விளம்பரம் என்று உங்கள் முயற்சியுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
சிறிய பட்ஜெட் திரைப்படம் என்று நீங்கள் கோர்வையே இல்லாத திரைக்கதை, சாதாரண நடிப்பு, மனதில் நிற்காத பாட்டு, பட்ஜெட் காரணமாக சில வாத்திய கருவிகளையே பயன்படுத்தி போடப்படும் பின்னணி இசை என்று நீங்கள் எது செய்தலும் வீண் தான். மக்கள் இருநூறு ரூபாய் கொடுத்து திரையரங்கில் உட்கார வைத்த திரைப்படங்கள் எல்லாம் என்ன, அவைகள் எதனால் ஜெயித்தது என்று ஆராய்ந்து பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும்.
மக்களின் ரசனை மாறிவிட்டதா? அப்படியானால் இன்று எப்படிப்பட்ட திரைப்படத்தை படைக்கவேண்டும் என்று ஒன்று இரண்டு வருடங்களில் வெளியான திரைப்படங்களே நமக்கான ஆராய்ச்சிக்கூடம். இந்த உண்மையை பணத்தை செலவு செய்து / இழந்து தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக செய்யலாம்.