பெரிய நடிகர்களுக்கான கதை பற்றாக்குறை இருக்கிறதா?

வணிகரீதியில் வெற்றிப்படங்களை தரும் / தர நினைக்கும் நடிகர்கள் அவர்களுடைய கதை தேர்வினை கவனமாக செய்கிறார்கள். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் (வணிக ரீதியில் / வசூலில் என்று புரிந்துகொள்ளவேண்டும்} இருக்கும் நடிகர்களுக்கான கதை பற்றாக்குறை இருப்பதாக அவ்வப்போது திரைத்துறையில் பேசிக்கொள்வதுண்டு. வருடத்திற்கு நூறு துணை, இணை இயக்குநரையாவது உருவாக்கிவிடும் நம்முடைய திரைத்துறையில் கதைக்கான பஞ்சம் இருக்கிறதா? இயக்குனரே இங்கே எழுத்தாளராக இருக்கவேண்டும் அல்லது எழுத்தாளர்களுக்கு இயக்கும் திறன் இருக்கவேண்டும் என்கிற மாய விதி வேறு இருக்கிறது.

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் நூற்றுக்கணக்கான கதைகளை மாதம் தோறும் எழுத்தாளர்கள் அனுப்புகிறார்கள். அதில் பத்து சதவிகிதம் கூடவா பெரிய நடிகர்களுக்கு பொருத்தமாக இருக்காது? தன்னுடைய கதைகளை தயாரிப்பாளரோ அல்லது நடிகர்களோ படித்துவிட்டு வாய்ப்பு தரமாட்டார்களா என்று எங்கும் நூற்றுக்கணக்கான இயக்குனர்கள் ஒரு பக்கம், யாரிடம் எனக்கு ஏற்ற கதை இருக்கிறது என்று காத்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் ஒரு பக்கம் என்று இரு துருவங்களாக பிரிந்து இருக்கிறார்கள். இவர்களை இணைப்பது யாருடைய வேலை? இதை நாம் அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

பெரிய நடிகர்களுக்கான கதை பற்றாக்குறை இங்கு கட்டாயமாக இருக்கிறது. நடிகர்களின் கால் சீட் இருக்கிறது என்று அடுத்த மூன்று மாதத்திற்கு அந்த பெரிய நடிகரின் தேதி கிடைத்துவிட்டது. உடனே ஒரு கதையை தயார் செய்து பூஜையை போட்டு, மூன்று மாதத்தில் ஷூட்டிங்கை முடித்துவிடலாம் என்று ரெடிமேட் கதைகளை தயார் செய்கிறார்கள். தரத்திற்கு முக்கியத்துவம் தராமல் அந்த நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற முந்தய திரைப்படங்களின் சூட்சமங்களை, சூத்திரங்களை எடுத்து அதற்கு மேல் கதை விவாதங்கள் செய்கிறார்கள். 

நடிகர்கள், அவர்களின் வாய்ப்புக்காக காத்திருக்கும் களங்களில் என்ன கதை என்று கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொள்கிறார்கள். வெற்றிகள் வர வர அவர்களுடைய வணிக சந்தையை தக்க வைத்துக்கொள்ள கதையை கேட்டு அவர்களுக்கு அந்த கதை சரிப்பட்டு வருமா, அவர்களுடைய ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று பல நூறு முறை கேள்விகளை கேட்கிறார்கள். வெற்றிகள் வர வர ஐயங்களும் அதிகரிக்கிறது. இதனாலேயே கதை சொல்லும்பொழுது அவர்களுடைய கற்பனை திறனால் வெற்றியை உணர முடியாவிட்டால் அந்த கதையை அவர்கள் நிராகரிக்கிறார்கள். மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வெற்றி சூத்திரங்கள் அவர்களுடைய கண்ணனுக்கு முன்னால் இருப்பதால் அதையே அவர்கள் கதை உரிமை வாங்கி இவர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துக்கொள்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாமலை திரைப்படத்தின் கதை என்னவென்று தெரியாமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு பிறகு ஒரு குழு அமைத்து கதையை தயார் செய்தார்கள். வீரா, பாட்ஷா , முத்து, சந்திரமுகி, குசேலன் எல்லாமே வேறு மொழியில் வந்து வெற்றி பெற்ற கதை தான். அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்றவை இவருடைய பார்முலா கதைகள். கதை இலாகாவை அமைத்து இவருக்கு ஏற்ற கதையை தயார் செய்தார்கள்.

நாயகனுக்கு பிறகு நிறைய உள் மற்றும் வெளி நாடு உரிமை பெற்று உலக நாயகன் கமல் அவர்கள் திரைப்படங்களை எடுத்தார் அல்லது அவர் படித்த புத்தகங்களின் கருவில் இருந்து உந்துதல் பெற்று எடுத்தார். தேவர் மகன், அன்பே சிவம், குருதிப்புனல், விருமாண்டி, வசூல் ராஜா, தூங்காவனம், பாபநாசம் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். 

தளபதி விஜய் அவர்களும் காதலுக்கு மரியாதையை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய தெலுங்கு திரைப்படத்தின் மறு ஆக்கத்தில் நடித்திருக்கிறார். தேடினேன் வந்தாள், பிரெண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். சூர்யா அவர்களும் அவரால் கற்பனை செய்து பார்க்கக்கூடிய கதையைத்தான் விரும்பி செய்கிறார். ஜெய் பீம், சூரரைப்போற்று போன்ற திரைப்படங்களின் ஸ்கிரிப்ட் முழுவதுமாக படித்து அவருக்கு சரியாக இருக்கும் என்று தோன்றினால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். இதனாலேயே ஸ்கிரிப்ட் முழுவதுமாக தயார் செய்யாத இயக்குனர்கள் பாலா, கவுதம் மேனன் போன்றவர்களுடன் பணியாற்றுவது அவருக்கு கடினமாக இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு நடிகர்களும் வணிக ரீதியில் வற்றி பெறும் வரை நடிகன் என்கிறஅங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று எந்த விதமான கதைகளிலும் நடிக்கிறார்கள். வெற்றி அவர்களின் இடத்தை தக்க வைத்துக்கொள்ள கதை விவாதங்களும், கதை குழுக்களும், ஆராய்ச்சிகளும், சூத்திரங்களும் தேவைப்படுகிறது. நான் முன்பு சொன்ன நூற்றுக்கணக்கான இயக்குனர்களும் அவர்களின் ஆயிரக்கணக்கான கதைகளும் இவர்களுடைய இன்றைய வணிகத்திற்கும், பெயருக்கும், புகழுக்கும் ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.

பெரிய நடிகர்களுக்கு தேவை புதுமையான கோணத்தில் சொல்லப்படுகிற அதே பழைய கதை கரு தான். அதற்கு மேல் இவர்களுடைய திரை ஆளுமையும், இவர்களுக்காகவே எழுதப்படும் காட்சி அமைப்புகளுமே இவர்களுடைய ரசிகர்களுக்கு விருந்தாகிறது. கதை பற்றாக்குறை என்று ஒன்று இல்லை. ஆனால் பெரிய நடிகர்களுக்காக எழுதக்கூடிய கதையின் பற்றாக்குறை கட்டாயமாக இருக்கிறது. இதைப்பற்றி அடுத்து வரும் கட்டுரையிலும் தொடர்வோம்.