பெண் யாருக்கும் அடிமையில்லை - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

 அரங்கில் பலத்த கரகோஷங்களுக்கிடையே 'கோம்ஸ்' பேசிக்கொண்டிருந்தாள். கோமதி ஒரு புதுமை பெண். பட்டதாரி. பெண்கள் முன்னேறினால் தான் சமுதாயம் முன்னேறும் என்கிற சிந்தனை உடையவள். அவள் எழுதிய "பெண் யாருக்கும் அடிமையில்லை" என்கிற புத்தகம் மிக பிரபலமானது. எழுத்துலகில் "கோம்ஸ்" என்கிற பெயரில் பல கட்டுரைகளையும், பெண்கள் முன்னேற்ற புத்தகங்களையும் எழுகிறாள். இன்று அவளது நூறாவது மேடைப்பேச்சு. சந்தோஷமாகவும், குதூகலத்துடனும் பெண்களுக்கு மத்தியில் உரையாற்றுகிறாள்.

 "பெண்ணானவள் மிகவும் புத்திசாலி. அவள் முன்னேறினால் மற்றவர்களுக்கு வாய்ப்பு போய்விடுமோ என்று பயந்து அவளை அடுப்படியிலேயே வைத்துள்ளார்கள்." என்று கோம்ஸ் சொல்லும்பொழுது கூட்டத்தில் இருக்கும் பெண்கள் அதை ஆமோதிப்பது போல் தலை அசைகிறார்கள். கோம்ஸ் தொடர்கிறாள் "பெண்ணை அடுப்படியிலேயே வைக்க நீ நன்றாக சமைக்கிறாய், உன்னுடைய கை பக்குவம் யாருக்கு வரும் என்று அவளை அடுப்பங்கரையிலேயே வைக்கும் ஏற்ப்பாடு காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது."

கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண் "ஆமாம் சகோதரி. எங்கள் வீட்டிலேயும் இப்படித்தான் சொல்கிறார்கள்" என்றாள்.

அரங்கில் பலத்த கரகோஷம் ஒலித்தது. இன்னொரு பெண் கூட்டத்தில் இருந்து எழுந்து பேசினாள் "எனக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை. அதற்க்கு சம்மதித்து தான் என்னை கல்யாணம் செய்துகொண்டார் என் கணவர். ஆனால் திருமணத்திற்கு பிறகு குழந்தை வந்ததும் என்னால் வேலைக்கு போக முடியவில்லை. இந்த சமுதாயத்திற்கு பெண் என்றால் குழந்தை பெற்று தரும் சாதனம்."

கோம்ஸ் உற்சாகமாக தொடர்ந்தாள் "இது ஒவ்வொரு வீட்டு பிரச்சனை. நம்மால் எதை சாதிக்க முடியாது? இன்றிலிருந்து எல்லோரும் சபதமெடுப்போம். ஒரு பெண் கூட யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது. எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யவேண்டும். எல்லோரும் அவர்களின் இலக்கை நோக்கி பயணிக்கவேண்டும்." 

கூட்டம் கலைந்தது. எல்லோரும் உற்சாகத்துடன் வீட்டிற்கு சென்றார்கள். கோம்ஸ் அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் இருக்கும் பெட்டி படுக்கைகளை பார்த்து அவளுக்கு அதிர்ச்சி.

 "அம்மா... அம்மா" என்று கத்தினாள் கோம்ஸ்.

"ஏண்டி கத்துற?" என்றாள் அம்மா.

"எங்க போற? பெட்டியெல்லாம்...? என்றாள் கோம்ஸ்.

"மறந்துட்டியா? போன மாசமே சொன்னேனே என்னோட பெரியம்மா பேத்திக்கு கல்யாணம்" என்றாள் அம்மா.

"அடடா. சுத்தமா மறந்துட்டேன். நீயாவது ஞாபகப்படுத்த கூடாதா? என்றாள் கோம்ஸ்.

"ஏண்டி. ஒரு வாரமா உங்கிட்ட பேச வந்தா எப்ப பார்த்தாலும் லேப்டாப் கைல வச்சிக்கிட்டு நான் என்ன சொன்னாலும் தலையாடிகிட்டு இருந்துட்டு இப்ப வந்து என்ன கேளு." என்று கடிந்துகொண்டாள் அம்மா.

"ஐயோ! நா வேலைக்கு நடுவுல நீ சொன்னதையே கவனிக்கலம்மா. இப்ப என்ன நீ போய் தான் ஆகணுமா?" என்றாள் கோம்ஸ்.

"கிளம்புற நேரத்துல என்னடி இப்படி சொல்ற. போகலேன்னா கோச்சிப்பாங்க. முக்கியமான கல்யாணம்." என்றாள் அம்மா.

"நீ போய்ட்டின்னா என் பையன யாரு பாத்துப்பா? உன்ன மாதிரி நேரத்துக்கு அவனுக்கு சாப்பாடு போட்டு, ஸ்கூலுக்கு அனுப்பி, பாடம் சொல்லிக்கொடுக்க யாரால முடியும்? என்றாள் கோம்ஸ்.

"அதுனால தான் அவன் பொறந்ததுலேந்து சொல்றேன். அவனை உன் மாமியார்கிட்ட குடுத்து பழக்க படுத்துன்னு." என்றாள் அம்மா.

"எனக்கு அவங்க மேல நம்பிக்கை இல்ல. அவங்க வேலைக்கு போறவங்க. என் புள்ளைய எப்படி நல்லா பாத்துப்பாங்கன்னு நினைக்குற?" என்றாள் கோம்ஸ்.

"சரி. அப்ப உன் புருஷன்கிட்டயாவது குடுத்து பழக்கப்படுத்தலாம்ல? உங்க அப்பா வேலைய விட்டு என்னையும் உன்னையும் ஒரு வருஷம் பாத்துக்கிட்டார் தெரியுமா?" என்றாள் அம்மா.

"அம்மா. அவர் எவ்ளோ பெரிய வேலையில இருக்காரு, எவ்ளோ சம்பாதிக்கிறாரு. அவர வீட்டுல உட்கார சொல்றியா? அப்பாவோட அவர கம்பேர் பண்ணாதே!" என்று கடுமையாக சொன்னாள் கோம்ஸ்.

"உனக்கு உன் புருஷன் பெருசுன்னா எனக்கு என் புருஷன் பெருசுடி. சரி இப்ப எதுக்கு அதெல்லாம். ஆறு மணிக்கு டிரெயின். அப்பா வந்ததும் நாங்க கிளம்பிடுவோம். நீ உன் குழந்தையை பாத்துக்கோ." என்றாள் அம்மா.

"எனக்கு எவ்ளோ வேலை இருக்கு. எத்தனை இடத்துல போய் பேசணும். அதுக்கெல்லாம் தயார் பண்ணவேணாமா? குழந்தைய பாத்துக்கணும், வீட்டுலயே இருக்கணும்னு பொம்பளைங்கள இன்னும் அடிமையாலாம் வச்சிருக்க முடியாது. சுதந்திரமா வெளிய போகவிடாம, நினைச்சதை செய்ய விடாம இனிமேலாம் வீட்டுலயே பெண்கள வச்சி பூட்ட முடியாது தெரிஞ்சிக்கோ." என்றாள் கோம்ஸ். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசினாள் "உனக்கு நான் முக்கியமா இல்ல உன்னோட வீட்டு கல்யாணம் முக்கியமான்னு நீயே முடிவு பண்ணிக்கோமா."

"ஏண்டி. நானே ஒரு வருஷத்துக்கு அப்பறம் தான் ஒரு விசேஷத்துக்கு போறேன். எனக்கும் ஒரு ரிலாக்க்ஷேஷன் வேணாமா?" என்றாள் அம்மா.

"அப்போ என் பையன பாத்துக்கறது உனக்கு வலிக்குது? ரொம்ப கஷ்டமா இருக்கு? எனக்கு பண்றதுன்னா உனக்கு கசக்குமே!" என்று பொரிந்து தள்ளினாள் கோம்ஸ்.

"இப்ப என்ன தாண்டி செய்ய சொல்ற?" என்று பாவமாக கேட்டாள் அம்மா.

"எனக்கு தெரியாதும்மா. அப்பறம் நான் போகவேணாம்னு சொன்னேன்னு சொல்லுவே. எனக்கு எதுக்கு வம்பு? நீ போ. நானும் என் பிள்ளையும் எப்படியோ போறோம்." என்றாள் கோம்ஸ்.

அமைதியாக எழுந்து ஊருக்கு போகும் பையை தூக்க முடியாமல் தூக்கி ரூமுக்குள் எடுத்துச்சென்றாள் அம்மா. காலிங் பெல் சத்தம் கேட்டது. கோம்ஸ் கதவை திறந்தாள். வீட்டு வேலைக்காரி வந்திருந்தாள்.

அவளைப்பார்த்ததும் கோம்ஸ் கத்தினாள் "என்ன சுந்தரி? ஒழுங்காவே வேலைக்கு வறதில்ல, வீடு அப்படியே குப்பையா இருக்கு. வாரத்துக்கு ஒரு நாள் வீட்ட துடைக்கணும்னு சொல்லியிருக்கேன். ஆனா வீடு ரொம்ப அழுக்கா இருக்கு."

"இல்லம்மா. எல்லாமே சரியா செய்றேன். அம்மாகிட்ட வேனா கேளுங்க." என்றாள் சுந்தரி.

"அம்மாவுக்கு என்ன தெரியும்! நான் பாத்துகிட்டே தானே இருக்கேன். ஒழுங்கா வேலை செய்றதா இருந்தா செய். இல்லேன்னா வேற ஒரு வேலைக்காரிய பாக்கறதுக்கு எனக்கு எவ்ளோ நேரமாகும்." என்றாள் கோம்ஸ்.

அம்மா ரூமில் அந்த பையை வைத்துவிட்டு திரும்பினாள். அங்கே ஒரு மேஜையில் கோம்ஸ் எழுதிய "பெண் யாருக்கும் அடிமையில்லை" என்கிற புத்தகத்தை பார்த்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.