பல வழிகளில் திரைக்கதை கற்று கொள்ள முடியும் என்றாலும் திரைப்படங்கள் பார்த்து ஆராய்வது மூலமாகவும் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும். நான் சிறு வயது முதல் நிறைய தமிழ் திரைப்படங்களும் குறைவான மற்ற மொழி திரைப்படங்களும் பார்ப்பவன். எனக்கு தெரிந்த அறிவை வைத்து தெரிந்து கொண்டது என்னவென்றால் ஓவ்வொரு கதைக்கும் ஒரு காரணம், காரியம் வேண்டும். காரணம் வேறு காரியம் வேறாக இருக்கக்கூடாது என்பதுதான்.
ஒரு ராஜாவிற்கு உடல் சரியில்லை அவருக்கான மருந்து கடல் தாண்டி உள்ள ஒரு தீவில் இருக்கும் பூவில் உள்ளது என்றால் அதை யார் கொண்டு வரப்போகிறார்கள், அவர்கள் சந்திக்கும் சவால் என்ன, கடைசியில் கொண்டு வர முடிந்ததா இல்லையா என்பது தான் காரணத்திர்க்கும் காரியத்திற்கும் உள்ள தொடர்பு.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியை மிகவும் விரும்புவார். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் கதாநாயகன் வீட்டில் டாய்லெட் இருக்க வேண்டும் என்றும் அது இல்லாமல் பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று கதாநாயகி சொல்கிறாள். அவளின் விருப்பத்தின் பேரில் டாய்லெட் பணி நடை பெறுகிறது.
எதிர்பாராமல் கதாநாயகி டாய்லெட் சுவர் இடிந்து நோய்வாய் படுகிறாள். இப்பொழுது காரணம் என்னவென்று தெரிந்துவிட்டது.
காரியமாக கதாநாயகன் முதலில் டாய்லெட் விஷயங்களுக்காக போராடுவார் என்று எதிர்பார்த்தேன். மனைவி சொன்ன பெண்கள் பிரட்சனையை அவர் உணர்ந்து பல ஊர்களுக்கு சென்று டாய்லெட் கட்டி தருவார், அதில் இருக்கும் அரசியல் லாபம், அரசியல்வாதிகளின் எதிர்ப்பு, கமிஷன் அடிப்பவர்கள் இவருக்கு கொடுக்கும் தொல்லை என்று இயற்கையாக கதை நகரும் (Natural Conflict) என்று நினைத்தேன். மாறாக ஜனாதிபதி ஆகி ஆட்டுக்குட்டியின் பிரச்சனைக்கு பாடு படுவார் என்று நினைக்கவில்லை.
கதை தொடங்கிய காரணம் வேறு, கதாநாயகனின் காரியம் வேறாக அமைந்துவிட்டது. எவ்வளவோ பிரட்சனைகளுக்கு ஜனாதிபதி குரல் கொடுக்க வேண்டும் என்றாலும் மனைவியும், அவளின் ஆசையும், அவளுக்கு நடந்த விபத்தும் தீர்வு இன்றி போனதில் எனக்கு ஒரு வருத்தம்.