விஜயலட்சுமியின் பிரசவம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

 அறுபது வயது, குள்ளமான உருவம், கருப்பான தேகம், புதர் போல் மண்டிக்கிடக்கும் அவரது தாடியில் இருந்து மீசையை பிரித்து எடுத்து அதை பல முறை முறுக்கிக் கொண்டிருந்தார் 'மூக்கையா'. பார்ப்பதற்கு படபடப்பாக காணப்பட்டார். விஜயலட்சுமி கர்ப்பம் என்று தெரிந்த நாள் முதல் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் மூக்கையா. இரண்டு நாட்களாக விஜயலட்சுமி பிரசவ வலியில், வேதனையில் சத்தம் போடுவது மூக்கைய்யாவின் மனதில் பெரிய பாரம் ஒன்று வைத்தது போல் இருந்தது.

 விஜயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டரை பார்த்ததும் மூக்கையா அவரை நோக்கி ஓடி சென்றார்.

  "விஜயலட்சுமி எப்படி இருக்கு? அவ ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடல. இன்னைக்குள்ள பிரசவம் ஆகிடுமா டாக்டர்? அவ உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? என்று மூக்கையா டாக்டரிடம் கேட்கிறார்.

 டாக்டர் பதிலுக்கு, "இன்னைக்குள்ள பிரசவம் ஆகும் ஆனா இந்த பிரசவம் கொஞ்சம் வலியும் வேதனையுமா தான் இருக்கும். பிரசவம் முடிஞ்சி ஒரு வாரம் எந்த வேலையும் வாங்கக்கூடாது. அப்படி செஞ்சா காலத்துக்கும் உங்களுக்கு உபயோகம் இருக்காது." என்றார்.

 மூக்கையா, "டாக்டர் நா கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. பிறக்கப்போறது ஆணா இல்ல பெண்ணா? என்று தயங்கி தயங்கி கேட்டார்.

 டாக்டர் சிரித்துக்கொண்டே, "இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்க தானே போறீங்க" என்று சொல்லிக்கொண்டே விஜயலட்சுமியை நோக்கி செல்கிறார்.

 இவர்கள் பேசிக்கொண்டு இருந்த அறையில் முருகனின் படம் ஒன்று தொங்கிக்கொண்டு இருக்கிறது. மூக்கையா முருகனிடம், "அப்பனே! பொறக்குறது பொட்டையா இருக்கட்டும். ஆணா பொறந்தா எனக்கு பிரயோசனம் இல்ல" என்று வேண்டுகிறார்.

 மூக்கைய்யாவின் இந்த செயலை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அவரது மனைவி சிவகாமி மற்றும் மூன்று மகள்கள் வீரலட்சுமி, குணலட்சுமி, தனலட்சுமி.

 மூக்கையாவிற்கு காபி என்றால் உயிர். ஒரு நாளைக்கு இருபது முறை கூட குடிப்பார். அவற்றின் படபடப்பை தனியா வைக்க சிவகாமி வைத்திருக்கும் ஒரே அஸ்த்திரம் இந்த காபி. சிவகாமியின் கையில் மகிமை இருக்கிறதா அல்லது காபி பொடியில் மகிமை இருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றம் வைக்கலாம். மூக்கையாவிற்கு பிடித்தது போல் காபியை கலந்தாள் சிவகாமி. தனது மகள் தனலட்சுமியை அழைத்து அதை மூக்கைய்யாவிடம் தரச்சொன்னாள். தனலட்சுமி தயங்கினாள். அவளை பார்த்தாலே மூக்கையா கடுமையாக நடந்து கொள்வார் என்று மறுத்தாள். ஆனால் குணலட்சுமி அந்த காபியை வாங்கிக்கொண்டு தன் அப்பாவிடம் சென்றாள். அவளை பார்த்ததும் மூக்கையாவிற்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது.

 "சனியனே! உன்னை யார் இதெல்லாம் பண்ண சொன்னா? எங்க அவ?" என்று மனைவியை தேடினார் மூக்கையா. காபியின் மணம் அவரின் மூக்கை துளைத்தலும் வீம்பாக அதை வாங்க மறுக்கிறார். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு குணலட்சுமியிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

 விஜயலட்சுமிக்கு பிறக்கப்போறது ஆணா இல்ல பொட்டையா?” என்று மீண்டும் அவரது மீசையை முறுக்கி, கண்களை உருட்டி அவளின் பதிலுக்காக காத்திருக்கிறார்.

 அப்பாவிற்கு ஆண் தானே பிடிக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு "ஆண்" என்று பதில் தந்தாள்.

 இதை கேட்டதும் அவருக்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது. மீசையை இன்னும் வேகமாக முறுக்கி, கண்களை உருட்டி அவளிடம் வன்மத்தை கக்கினார்.

 "சனியனே! என்ன சொன்ன? ஆணா? ஏற்கனவே உங்க மூணு பேருக்கும் தண்ட சோறு போடுறேன். இதுல இன்னும் ஒண்ணா? நீங்கல்லாம் எனக்கு நிம்மதியே தர மாடீங்களா? விஜயலட்சுமியை தவிர வேற யாரு எனக்கு சம்பாதிச்சு போடுறதுதுக்கு இருக்கா? நீங்க மூணு பேரும் வேலைக்கும் போக மாட்டேங்கறீங்க, கல்யாணமும் நடக்க மாட்டேங்குது. இன்னும் எத்தன வருஷத்துக்கு தான் என் தலைமேலே உட்காந்து என்ன செலவாளி ஆக்கப்போறீங்களோ? என்று கத்தினார்.

 உடனே "பெண் தான்பா. பிறக்கிறது பொட்டையா தான் இருக்கும். விஜயலட்சுமிக்கு....." என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே மூக்கைய்யாவின் முகம் மலர்ந்தது. அவளிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு தனது புதர் தாடியை ஒதுக்கி, அதற்குள் இருக்கும் வாயை தேடி, காபியை ஊற்றினார்.

 "ஆகா! என்னே சுவை. காபினா அது சிவகாமியோட காபி தான்." என்று இவ்வளவு நேரம் ஆக்ரோஷமாக பேசியது இந்த மனிதன் தானா என்று கேட்கும் அளவிற்கு குழந்தையாக மாறி அந்த காபியின் சுவைக்குள் மூழ்கி விட்டார்.

 டாக்டர் பதட்டத்துடன் ஓடி வருகிறார். மூக்கையாவை பார்த்து "தல திரும்பிருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பிரசவம் நடந்திடும். இந்த மருந்தையெல்லாம் வாங்கிட்டு வாங்க." என்று சொல்கிறார்.

 டாக்டரை பார்த்து "என்ன நடந்தாலும் சரி. எனக்கு விஜயலட்சுமி தான் முக்கியம். சேய்க்கு என்ன ஆனாலும் தாய்க்கு ஒரு பாதிப்பும் ஆகக்கூடாது." என்று எச்சரித்தார். பின்பு மருந்து வாங்க ஓட்டினார்.

 காலியான காபி டம்ளரை பார்த்துக்கொண்டே குணலட்சுமி தன் அம்மாவை நோக்கி போகிறாள். அவளின் கண்கள் தங்கியிருப்பதை பார்த்த சிவகாமி அவளை கட்டி அனைத்து தேற்றினாள்.

 "ஏம்மா.. அப்பாவுக்கு எங்கள புடிக்காம போச்சு?" என்றாள் குணலட்சுமி.

 "பெரியவ பிறந்து நல்லா தான் இருந்தாரு. யாரோ அவர்கிட்ட ஆண் குழந்தை இருந்தா தான் அவர் தொழில் வளரும்னு சொல்லியிருக்காங்க. அதுலேந்து ஒவ்வொரு குழந்தை பிறகும் போது ஆணா இருக்கக் கூடாதா என்று நெனச்சி பெண் பிறந்ததும் ஏமாந்துட்டார். இது விதியா இல்ல கடவுள் செய்த சத்தியானு தெரியல. பிறந்த நீங்க மூணு பேரும் பொண்ணுங்களா இருந்துடீங்க. அதுக்கு மேல அவரோட தொழில் ரொம்ப பாதிக்கப்பட்டிருச்சி. அதுக்கு நீங்க தான் காரணம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டார்.என்றாள் சிவகாமி.

 விஜயலட்சுமியின் பிரசவ வலி சத்தம் கேட்டு அவர்களின் தெருவில் இருக்கும் மக்கள் எல்லோரும் மூக்கைய்யாவின் வீட்டிற்கு வெளியில் கூட ஆரம்பித்தார்கள். வாசலில் பேச்சு சத்தம் கேட்டு சிவகாமி வெளியே வந்தாள்.

 என்னம்மா இவ்ளோ சத்தம். டாக்டரை கூபிட்டங்களா?”, என்றாள் பூக்காரி.

 டாக்டர் இங்கே தான் இருக்கார்.” என்றாள் சிவகாமி.

 சுக பிரசவத்துக்கு முயற்சி பண்ண சொல்லு சிவகாமி. விஜயலட்சுமி எங்களுக்கு ரொம்ப முக்கியம். அவ எங்களுக்கு அம்மா மாதுரி. அவளால தான் என் குழந்தைங்க ஆரோக்கியமா வளர்ராங்க என்றாள் பக்கத்து வீட்டு வனஜா.

 வீட்டு வாசலில் இருக்கும் கூட்டத்தை பிரித்துக்கொண்டு மூக்கையா உள்ளே நுழைகிறார்.

 அண்ணே. கவலைபடாதே! விஜயலட்சுமிக்கு ஒன்னும் ஆகாது. நா கருமாரி அம்மாக்கிட்ட வேண்டிகிட்டேன் என்றாள் பூக்காரி.

 பூக்காரியை பொருட்படுத்தமால் உள்ளே சென்றார் மூக்கையா. அவர் கொண்டு வந்த மருந்தை ஊசியில் ஏற்றி டாக்டர் வீட்டின் பின்புறம் சென்றார்.  ஊசியை போட்டவுடன் பிரசவிக்க தொடங்கினாள் விஜயலட்சுமி. வீட்டின் வாசலில் இருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. பிரசவம் முடிஞ்சிருச்சு... பிரசவம் முடிஞ்சிருச்சு... என்று கூக்குரல் இட்டனர்.

 இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பிறந்தது ஆணா பெண்ணா என்று சொல்லிவிடுவார். "ஆண் என்று மட்டும் சொல்லிவிடக்கூடாது" என்று தன வாய்க்குள்ளே முணுமுணுத்துக்கொண்டார் மூக்கையா.

 சிவகாமியின் அருகில் மூன்று லட்சுமிகளும் வந்து நின்றனர்.

 "நாங்க பெண்ணா பொறக்கக்கூடாதுன்னு நினைச்சார் அப்பா. ஆனா விஜயலட்சுமிக்கு மட்டும் பெண் பிறக்கணும்னு வேண்டுறார். ஏம்மா? " என்றாள் குணலட்சுமி.

 சிவகாமி பதில் சொல்வதற்குள் டாக்டர் அங்கே வருகிறார். மூக்கைய்யாவின் மூச்சு வேகமாக அடித்தது. இதயம் படபடத்தது. என்ன பதில் சொல்லப்போகிறாரோ என்கிற பயம் முகத்தில் தெரிந்தது.

 "சொல்லங்க டாக்டர். விஜயலட்சுமி நல்லா இருக்காளா? பொறந்தது ஆணா இல்ல பெண்ணா?" என்று கேட்டார் மூக்கையா.

 பதில் சொல்வதற்கு முன் டாக்டர் எல்லோரையும் ஒரு முறை பார்க்கிறார். ஒரு தெருவே சேர்ந்து எதிர்பார்க்கும் பிரசவத்தை பற்றி இதற்க்கு முன் அவர் கேள்வி பட்டதில்லை.

 "என்னங்க இது. ஒரு மாட்டின் பிரசவத்துக்கு இத்தன பேர் கூடினத இப்போ தான் மொத தடவ பாக்குறேன்" என்றார் டாக்டர்.

 "அதெல்லாம் சரி. பிறந்தது ஆணா இல்ல பெண்ணா" என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டார் மூக்கையா.

ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன?” என்கிறார் டாக்டர்.

அதெப்படி ரெண்டும் ஒண்ணா இருக்கும். கன்னுக்குட்டி ஆண்ணா எனக்கு பிரயோசனம் இல்ல. அதுக்கு பருத்திக்கொட்ட, புண்ணாக்கு போட்டு வளர்த்து நான் என்ன அத ஜல்லிக்கட்டுக்கா அனுப்ப போறேன்? பொண்ணுனா நான் இப்போ போடுற தீனிக்கு பின்னாடி பாலா கறந்து சம்பாதிச்சுடுவேன்ல என்றார் மூக்கையா.

 தானே பார்த்துவிடலாம்னு கொல்லைப்பக்கம் ஓடினார் மூக்கையா. திரும்பி வந்து கூட்டத்தை நோக்கி "மகாலட்சுமி கண்ண தொறந்துட்டா. அவளே வீட்டுக்கு வந்திருக்கா" என்று கத்தினார் மூக்கையா.

 தன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை எல்லாம் டாக்டரிடம் தந்தார் மூக்கையா.

 "அண்ணே. நான் தான் மகாலட்சுமி வருவான்னு முன்னாடியே சொன்னேனே. எனக்குதான் சீம்பால்" என்றாள் பூக்காரி.

 மூக்கையா தலை அசைக்க. சந்தோஷத்தில் மக்கள் எல்லோரும் கலைந்து சென்றனர். சிவகாமி தன் மகள்களை பார்க்க, மகள்களும் அவர்களுக்கு புரிந்துவிட்டது என்று கண் அசைக்க வீட்டிற்குள் சென்றனர்.

 மூக்கையா தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் தன் வீட்டிற்கு மகாலட்சுமி வந்திருப்பதாக சொல்லி சந்தோசப்படுகிறார்.